‘கொடுத்தால் குறைவதில்லை’: இறைவனின் அருட்கொடை ஜகாத்!

Date:

இறைவனின் அருட்கொடை ஜகாத் என்ற தலைப்பிலான இந்த கட்டுரை இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் சமரசம் சஞ்சிகையில் வெளியானது. எனவே இந்த கட்டுரையின் பயனை வாசகர்களுக்கும் தருகின்றோம்.

’தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள் இன்னும் என் முன்னிலையில் தலை சாய்ப்பவர்களுடன் சேர்ந்து நீங்களும் தலை சாயுங்கள்.’ (திருக்குர்ஆன் 2:43)

இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒன்றான ஜகாத் எனும் வழிபாடு மனிதனையும் மனிதன் சம்பாதித்த செல்வத்தையும் நன்மையின் பக்கம் அழைத்துச் செல்கிறது.

தூய்மையையும் அருள்வளம் மிகுந்த வாழ்வையும் பிரகாசிக்கச் செய்கிறது. பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இன்றைய காலத்திலும் ஜகாத் வழங்குவதும், பெறுவதும் பொருளாதார முன்னேற்றுவதில் மிகப் பெரும் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது.

வறுமையைக் களைய ஜகாத் மேம்பாட்டுத் திட்டம்

சமூகத்தில் ஏழை எளியவர்கள், அநாதைகள், விதவைகள் போன்றோரின் நிலை என்ன? அவர்களின் உரிமைகள் யாவை என்பதை அறிந்து அவர்களுக்காக செல்வந்தர்கள் தங்களுடைய இஸ்லாமிய அடிப்படைக் கடமையான ஜகாத்தை ஆண்டுக்கு ஒருமுறை வழங்கும்போது சமூகத்தில் வறுமை ஒழிகிறது.

பல நாடுகள் வறுமையை ஒழிப்பதற்கான பல திட்டங்களைச் செயல்படுத்தினாலும் வறுமை ஒழிந்ததாகத் தெரியவில்லை. வறுமையும் பஞ்சமும் பசியும் பட்டினியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

முதளாளித்துவச் சுரண்டல்கள், வங்கிச் சுரண்டல், வங்கிக் கடனால் மென்மேலும் வறுமைக் கிடங்கில் மூழ்குபவர்கள், விவசாய வளர்ச்சிகள் தடைபெற்று கொண்டே இருத்தல் என வறுமைக் கோட்டிற்குக் கீழே செல்வதில் மக்கள் தினம் தினம் அல்லல்படுகின்றனர்.

இவ்வாறான வறுமையைக் களைவதில் ஜகாத் எனும் இறைவனின் மேம்பாட்டுத் திட்டம் ஆண்டுக்கு ஒருமுறை மனிதவள பொருளாதாரத்தை நிவர்த்தி செய்கிறது. மேலும் சமூகத்தில் வாழும் ஏழை எளியவரும் நலிவுற்றோரும் ஓரளவிற்கு செல்வத்தைக் கொண்டு பயன்பெற வேண்டும் என்பது ஜகாத்தின் நோக்கமாக இருப்பதுபோல செல்வம் ஒரே இடத்தில் தேங்கி விடக்கூடாது என்பதும் ஜகாத் கடமையாக்கப்பட்டதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

இறைவன் திருமறையில் கூறுகின்றான். ’ஏனெனில் அது உங்களில் உள்ள செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக!’ (திருக்குர்ஆன் 59:7) என்ற இறைவசனம் செல்வக் குவிப்பை அதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தாரிடம் மட்டும் செல்வம் முடங்கிக் கிடப்பதை இஸ்லாம் விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

செல்வத்தை முறையாகச் சம்பாதிப்பது அல்லது அதைச் சேர்த்து வைப்பது இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணானவை அல்ல. ஆனால் அது ஒரே ஒரு வர்க்கத்தாரிடம் மட்டும் தேங்கி விடக்கூடாது. அது சுழன்று கொண்டே இருக்க வேண்டும். மக்கள் அந்தச் செல்வத்தைக் கொண்டு அனுமதிக்கப்பட்ட முறையில் பயனடைய வேண்டும்.

இரு பிரிவினருக்கும் நலன்

வசதியுள்ளவர்கள், வசதியற்ற ஏழைகள் ஆகிய இரு பிரிவினரின் முன்னேற்றமும் நலனும் என்ற வகையில் ஜகாத் கடமையாக்கப்பட்டது. வசதி படைத்தவர்கள் பணம் சம்பாதிப்பதில் தாங்கிக் கொள்ளும் சிரமங்கள், அதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், உழைப்பு, செய்யும் முதலீடு ஆகியவையும் ஏழைகள் பணமில்லாததால் படும் சிரமங்கள் அவர்களின் பசி இதர தேவைகள் ஆகிய அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு திட்டம் ஜகாத்.

ஏழைகளைக் கேவலப்படுத்துவதற்காகவோ வசதி படைத்தவர்களை உறிஞ்சுவதற்காகவோ நசுக்குவதற்காகவோ இத்திட்டம் உருவாக்கப்படவில்லை. மக்களின் முன்னேற்றமும் நலமும் கொண்டதுதான் ஜகாத்.

ஜகாத் தர மறுப்பவர்களுக்கு

’ஏழைகள் சிரமப்படாமல் இருப்பதற்காக அவர்களுக்குத் தேவையான அளவு தொகையை வசதி படைத்த இஸ்லாமியர்களின் செல்வத்தை அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்றான்.

ஏழைகள் பட்டினியால் சிரமப்படுகின்றார்கள் என்றால் அது செல்வந்தர்களின் கஞ்சத்தனத்தால் மட்டுமே ஏற்படுகின்றது. அறிந்து கொள்ளுங்கள் அவர்களை அல்லாஹ் கடுமையாகக் கேள்வி கேட்பான். மிகக் கொடூரமான வேதனையும் அவர்களுக்கு உண்டு'(தபரானி)

மனிதனிடம் இயல்பாகவே இருக்கின்ற கஞ்சத்தனம் களையப்பட வேண்டும். இதற்கான சரியான பயிற்சித் திட்டம் ஜகாத். உண்மையில் ஒருவர் ஜகாத்தை வழங்கினால் அவரது செல்வத்திலிருந்து தீங்குகள் அகன்று விடும். அவருக்குப் பேரிழப்புகள் ஏற்படப் போவதில்லை.

பொதுவாக மனிதன் சொத்து, செல்வத்தின் மீது அளவு கடந்த பற்றுடையவனாக இருக்கின்றான். பணத்தையோ செல்வத்தையோ எளிதில் இழந்து விட மனிதன் விரும்பமாட்டான்.

அவனது பேச்சும் மூச்சும் பணமாக இருக்கிறது. பணத்தைக் குவிப்பதில் அவன் முழுச் சிந்தனையையும் உள்ளத்தையும் பறிகொடுத்து விடுகின்றான். அவனிடம் போதும் எனும் மனப்பான்மை எளிதில் உருவாவதில்லை. கொடுத்தால் குறைந்து விடும் என்ற மனப்பான்மை அவனைப் பணப் பித்தனாக மாற்றி உள்ளது.

’கொடுத்தால் குறைவதில்லை’ என்பது நபி வாக்கு. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ’தர்மம் செய்வதால் செல்வம் குறைவதில்லை’ (திர்மிதி). பலமுறை ஜகாத் கொடுத்தால் செல்வத்தில் குறைவு ஏற்படும்.

எனவே ஒருமுறை கொடுத்தால் போதும் என்பது தவறான கருத்தாகும். ஜகாத் ஒரு மனிதனின் செல்வத்தை விருத்தி செய்கிறது. ஆதலால் ஆண்டுக்கு ஒருமுறை ஜகாத் கண்டிப்பாக வழங்கபட வேண்டும்.

ஜகாத் கொடுக்கும்போது அல்லாஹ்வுடைய அருள் கிட்டுகின்றது. அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியும். மேலும் நேரான வழிமுறை கிடைக்கிறது. அவ்வாறே ஜகாத்தை வழங்குகின்றவர்களுக்கும் அதனைப் பெற்றுக் கொள்வோருக்கும் இடையே நல்லுறவு ஏற்படுகின்றது.

ஏழைகள் ஜகாத் கொடுப்பவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது. எனவே ஜகாத் இழப்பை ஏற்படுத்துவதில்லை. அது தனி மனிதர்களுக்கும் சமூகத்துக்கும் நலன்களைத் தோற்றுவிக்கின்றது.

அபூபக்கர்(ரலி) ஆட்சிக் காலத்தில் தொழுகையையும் ஜகாத்தையும் பிரித்துப் பார்த்த முஸ்லிம்களைச் சீர்படுத்துவதற்குப் பாடுபட்டார்கள். ’தொழுகையையும் ஜகாத்தையும் பிரித்துப் பார்ப்பவர்களுக்கும் ஜகாத் கொடுக்க மறுப்பவர்களுக்கும் எதிராக ஜிஹாத் செய்வேன்’ என்று அபூபக்கர்(ரலி) பிரகடனம் செய்தார்கள்.

இன்னொரு கோணத்திலும் ஜகாத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். பொதுவாக பாவங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சில பாவங்கள் மனிதர்களுக்குத் தனித்தனியாகவே தண்டனை அளிக்கப்படும். வேறு சில பாவங்களுக்கோ கூட்டுரீதியாகத் தண்டனை அளிக்கப்படும்.

அதாவது ஒட்டுமொத்த சமூகத்திற்குத் தண்டனை அளிக்கப்படும். ’ஒரு சமூகத்தில் வட்டியும், விபச்சாரமும், வறுமையும் பெருகினால் அந்தச் சமூகத்தைக் கோழைத்தனம் தொற்றிக் கொள்ளும் என்றும் எதிரிகள் அதனை வேட்டையாடுவார்கள்’ என்றும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (தபரானி)

இது போன்று சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் ஜகாத் கொடுப்பதைத் தவிர்ப்பார்களேயானால் அந்தச் சமுதாயத்தை பஞ்சமும் பற்றாக்குறையும் சூழ்ந்து கொள்ளும் என்றும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஜகாத்தின் நிபந்தனைகள்

ஜகாத் என்பது ரமளான் மாத இறுதிப் பகுதியில் ஏழைகளை வரிசையாக நிறுத்தி சில்லறைகளை வழங்குவதல்ல. ஒரு செல்வந்தர் தனது சொத்து விவரங்களை, வருமானங்களை, செலவினங்களைக் கணக்கிட்டு முறையாகக் கொடுப்பதே ஜகாத்.

ஜகாத் வறுமையை ஒழிக்க வல்லது. சில்லறை விநியோகம் ஏழை மக்களை மென்மேலும் உருவாக்கவே வழிவகுக்கும். ஜகாத் ஒருவர் மீது எப்போது கடமையாகின்றது என்றால் ஒருவரிடம் உள்ள பொருள், சொத்து, பணம் ஆகியவற்றின் மீது அவருக்கு முழுமையான உரிமை இருத்தல் வேண்டும். இரவலாகப் பெற்ற தங்கம், இடம், கடனாகத் தரப்பட்ட தொகை ஆகியவற்றின் மீது ஜகாத் கடமை ஆகாது.

ஜகாத்திற்கு ஓராண்டு முழுமையாகக் கடந்திருக்க வேண்டும். ஓராண்டின் இறுதியில் புதிதாகச் சொத்து வாங்கி இருந்தாலும் அதற்கான ஜகாத் கொடுப்பது அவர் மீது கடமையாகும். தொழிற்சாலையில் அடிப்படையான தேவைகளுக்காக இருக்கின்ற கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றின் மீது ஜகாத் கடமையாகாது.

ஜகாத்தின் அளவு மொத்த சொத்து மதிப்பிலிருந்து 2.5% ஜகாத்துக்குரியதாகும். 1000 ரூபாய்க்கு 25 ரூபாய் என்கிற கணக்கில் ஜகாத்தைப் பிரித்தெடுக்க வேண்டும்.

ஜகாத் பெறத் தகுதியானவர்கள்

ஜகாத் பணம் எந்தெந்த வழிகளில் செலவிடப்பட வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறியுள்ளது. ’இந்த தானதர்மங்களெல்லாம் ஏழைகள், வறியவர்கள், இந்த தானதர்மங்களை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும், பிடரிகளை விடுவிப்பதற்கும், கடனாளிகளுக்கும் மற்றும் இறைவழியில் செலவு செய்வதற்கும், பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமையாகும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:60)

இங்கு எட்டு துறைகளில் ஜகாத் பணம் செலுத்தப்பட வேண்டும் என்பது இந்த வசனங்களில் இருந்து தெளிவாகின்றது. ஏழைகள் எவரெனில் அவர்களிடம் பொருள் இருக்கும். ஆனால் தேவையை விடக் குறைவாக இருக்கும். பிள்ளைகளின் கல்விச் செலவைச் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள்.

மருத்துவச் செலவுகள், எதிர்பாரா செலவுகளைச் சமாளிக்க இயலாதவர்களாய் இருப்பார்கள். ஏழைகளாய் இருக்கின்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஜகாதில் முன்னுரிமை தரப்பட வேண்டும். வறியவர்கள் எவரெனில் அவர்களிடம் பணமோ பொருளோ வருமானத்திற்கான எந்த ஒரு வழியோ இருக்காது.

ஜகாத் பணத்தைக் கொடுக்கும்போது வாங்குபவரின் மனம் நோகும்படி நடந்து கொள்ளக்கூடாது. கேவலப்படுத்துகின்ற தொணியில் கொடுக்கக்கூடாது.

ஜகாத் கொடுத்த பிறகு பூரித்து விடக்கூடாது. ஜகாத் கொடுக்கத் தகுதி இல்லாதவர்கள் வசதி படைத்தவர்களிடம் வசூல் செய்து அதனை ஏழைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: ’(நபியே!) அவர்களுடைய பொருள்களிலிருந்து தானத்தை வசூல் செய்துகொண்டு அதன் மூலம் அவர்களைத் தூய்மையாக்குவீராக; (நல்வழியில்) அவர்களை முன்னேறச் செய்வீராக! மேலும், அவர்களுக்காக (நல்லருள் வேண்டிப்) பிரார்த்திப்பீராக! ஏனென்றால், உம்முடைய பிரார்த்தனை திண்ணமாக அவர்களுக்குச் சாந்தி அளிக்கக்கூடியதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:103)

கூட்டுரீதியான ஜகாத் வசூல்

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதற்கு ஜகாத் மிகவும் முக்கிய பங்கு வகுக்கின்றது. ஜகாத் கூட்டுரீதியாக வசூல் செய்வதற்கான பணிகளை நபித்தோழர்களில் மிகவும் தகுதி வாய்ந்த ஆற்றல் மிக்க நபர்களை அண்ணல் நபி(ஸல்) தேர்ந்தெடுத்தார்கள்.

அமானிதம் பேணுதல், நேர்மை, பொறுப்புணர்வு, திறமை என எல்லாவற்றிலும் அவர்கள் உயர்ந்து நின்றனர். இவ்வாறாக உமர்(ரலி) அவர்களை மதீனத்துச் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களை பனூ ஹர் கோத்திரத்தாரிடமும், அதீ பின் ஹாதிம்(ரலி) அவர்களை தய், அஸத் கோத்திரத்தாரிடமும் அம்ரு பின் ஆஸ்(ரலி) அவர்களை ஃபஸாரா கோத்திரத்தாரிடமும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் ஜகாத் வசூலிக்கப்பட்டு மனிதன் இவ்வுலகில் அமைதியாகவும் நிம்மதியாகவும் நன்மைகளோடு வாழ வேண்டி இறைவனும் அவனது தூதரும் காட்டித்தந்த கூட்டு முயற்சியினூடாக செயல்படுத்துகின்றபோது உரிய நல்விளைவுகளைப் பெற்றுத்தரும்.

கட்டாயம் தரப்பட வேண்டிய ஜகாத்தை அல்லாஹ்வின் பாதையில் வழங்கி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறக்கூடிய தகுதியைப் பெற முயற்சி செய்வோம்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...