பேஸ்புக்கில் அவதூறு பரப்புவோரை தண்டிக்கும் சட்டம் இந்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சமூக ஊடகங்களில் அவதூறு மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சமூக பாதுகாப்பு சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சு இந்த சமூக பாதுகாப்பு சட்டத்தை (ஆன்லைன் பாதுகாப்பு சட்டம்) முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மூன்று வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பு சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிபுணர்களின் உதவியுடன் நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவால் இந்த மசோதா தயாரிக்கப்பட்டது.
இந்த சட்டமூலத்தை முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தலைமையில் கொண்டுவர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவருக்குப் பின்னர் நீதியமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அவதானிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபரின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது.
இந்திய அரசு அப்படி ஒரு மசோதாவை கொண்டு வந்துள்ளது. இனிமேல் எந்த அடிப்படையும் இல்லாமல் சமூக வலைதளங்களில் யாரும் அவதூறு செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அவர்களை நீதியின் முன் நிறுத்த முடியும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.