அரசியலில் இருந்து இம்ரான் கானை தீர்த்துக்கட்ட முயற்சி: (லத்தீப் பாரூக்)

Date:

பாகிஸ்தானின் ஆளும் நிலப்பிரபுத்துவ குடும்பங்கள் செய்த தவறுகளின்
விளைவாகத் தான் அந்த நாடு பிளவு பட்டு பங்களாதேஷ் உருவானது.

ஒரு நாட்டையே துண்டாடிய இதே சக்திகள் தான் இன்று மக்களால் ஜனநாயக
ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் இம்ரான் கானை அரசியலில் இருந்து
ஒட்டு மொத்தமாக தீர்த்துக் கட்டும் முயற்சிகளிலும் இறங்கி உள்ளன.

ஆனால் அதில் உள்ள ஆபத்தை அவர்கள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வரலாற்று ஜாம்பவான் நாயகனாக இருந்து பின்னர்
அரசியலில் பிரவேசித்த இம்ரான் கான் 2018 ஆகஸ்ட்டில் இடம்பெற்ற ஜனநாயக
ரீதியான சுதந்திரமானதும் நீதியானதமான தேர்தலில் பிரதமராகத் தெரிவு
செய்யப்பட்டார்.

உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர் பாகிஸ்தானின் தஹ்ரீப் ஏ இன்ஷாப் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

அவர் பதவிக்கு வந்தது முதல் 1947 முதல் அடுத்தடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் இராணுவ ஆட்சிமுறைக்கு முடிவு கட்டும் வகையில் தேவையான ஜனநாயக மரபுகளைக் கட்டி எழுப்பினார்.

பாகிஸ்தான் ஏனைய வெளிச் சக்திகளிடம் சிக்கி அவற்றுக்கே உரிய தீய நிகழ்ச்சி
நிரலில் தங்கி இருப்பதற்கு பதிலாக தன்னில் தானே தங்கி இருக்கக் கூடிய ஒரு தூர

நோக்குப் பார்வையைக் கட்டி எழுப்பத் தொடங்கினார். பாகிஸ்தானிடம் ஒரு
சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கை இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

தனது அரசாங்கத்தின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையால் தான்
இன்றைய அரசியல் நெருக்கடிகள் உருவானதாகவும், அதற்கு முன்னர் தனது
நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளை வெளிநாடுகளில் இருந்து வரும்
தொலைபேசி அழைப்புக்கள் தான் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தன என்றும்
அவர் ஒரு முறை கூறி இருந்தார். இந்த கருத்தின் காரணமாக வாஷிங்டன் அவர் மீது கோபம் கொண்டது.

பாகிஸ்தானின் சுதந்திர வெளிநாட்டுக் கொள்கையை வாஷிங்டன் எதிர்த்தது. கொடிய அடக்குமுறையும் இனவாத பாரபட்ச போக்கும் உடைய சட்டவிரோத
குடியேற்ற நாடான இஸ்ரேலை அங்கீகரிக்க அவர் மறுத்தார்.

தனது நாட்டின் பொருளாதார தேவைகளின் நிமித்தம் நேரடியான சில காரணங்களுக்காக (அதேவேளை மத்திய ஆசிய பிராந்தியத்தின் பூகோள அரசியல் மூலோபாய ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்காகவும்) அவர் ரஷ்யாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். அவர் ஈரானுடனும் ஒத்துழைப்புக்களையும் உறவுகளையும் ஏற்படுத்தினார்.

சீனாவுடனும் உறவுகளை பலப்படுத்திக் கொண்ட இம்ரான்கான் வாஷிங்டனுடனும் நட்பு ரீதியான தொடர்புளைத் தொடர்ந்து பேணி வரவே தான் விரும்புவதாக மீண்டும் மீண்டும் கூறி வந்தார்.

ஆப்கானிஸ்தானிலும் அதுசார்ந்த விரிவான பிராந்தியத்திலும் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதில் வாஷிங்டனுடன் இணைந்து செயற்பட முடியும் என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் 1960 களில் இருந்தே சீனாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட
ஒரு நாடாகும். ஆனால் வாஷிங்டனை மகிழ்விப்பதில் பாகிஸ்தான் எடுத்துக்
கொண்ட அதீத ஆர்வம் சீனாவின் முகத்தில் ஓங்கி அறையப்பட்டது போல்
அமைந்தது.

காஷ்மீர் விவகாரத்தை சமாதானமாக முடிவுக்கு கொண்டு வருமாறு
அவர் இந்தியாவுக்கும் தூது அனுப்பினார். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களின் குரலாக இம்ரானின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

இது அவருக்கு துரித வளர்ச்சியையும் பிரபலத்தையும் கொண்டு வந்தது. முன்னர் முஸ்லிம்களின் குரலாக ஒலித்த மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் மொஹமட் முதுமை அடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலான ஒரு குரலாக இம்ரானின் குரலை உலக மக்கள் அவதானிக்கத் தொடங்கினர். குறிப்பாக உலகம் முழுவதும்

பலஸ்தீன மக்களுக்கான மஹாதிரின் குரலுக்கு பதிலாக இம்ரானின் குரல்
அமைந்தது. மஹாதிர் மொஹமட்டுடனும், துருக்கி ஜனாதிபதி எர்டொகனுடனும்
இணைந்து உலக முஸ்லிம்களை ஒரே அணியின் கீழ் கொண்டு வரும் வகையில்
தனியானதோர் முஸ்லிம் நேச அணியை உருவாக்கும் முயற்சியில் அவர்
இறங்கினார்.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான ஓஐஸி யின் கூட்டம் இஸ்லாமாபாத்தில்
இடம்பெற்ற போது அங்கு உரை நிகழ்தியவர்களில் பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல்
விடயங்களில் முஸ்லிம் உலகம் தோற்றுப் போய் நிற்கின்றது என்று துணிச்சலாகக்
கருத்து வெளியிட்ட ஒரே தலைவர் இம்ரான் கான் மட்டுமே.

இவ்வாறு முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயத்தில் இம்ரானின் குரல் உரத்து ஒலித்தமை உலக முஸ்லிம்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கத் தொடங்கியது.

அப்போது தான் இந்தக் குரல் நசுக்கப்படவேண்டிய குரல் என மேற்குலகம் முடிவு செய்தது. அது தான் உள்ளுர் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையாக மாறியது.

ஒரு காலத்தில் பாகிஸ்தானின் பிரபுத்துவ போட்டி குடும்பங்களாக இருந்த ஷரீப்
குடும்பமும் பூட்டோ குடும்பமும் அமெரிக்காவின் பூரண ஆதரவோடு இம்ரானை
அரசியலில் இருந்து அகற்றவும், பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரவும் முடிவு செய்தன.

இம்ரான் கானின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அவர்கள் அதற்குத்
தேவையான இலஞ்சத்தை வழங்கினர். அதன் விளைவாக நம்பிக்கையில்லாத்
தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி மேலோங்கி வந்த முஸ்லிம்களுக்கான ஒரு குரலை நசுக்க அமெரிக்கா மேற்கொண்ட சதியே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்.

அமெரிக்கா பாகிஸ்தானின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக இம்ரான்
நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி வாஷிங்டனோடு சேர்ந்து தன்னை பதவி கவிழ்க்க சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ரஷ்யா மற்றும் சீனா சம்பந்தப்பட்ட பூகோள ரீதியான விடயங்களில் தான் அமெரிக்காவோடும் ஐரோப்பாவுடனும் இணைந்து கொள்ள மறுத்ததே இதற்கு காரணம் என்றும் இம்ரான் கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின்
முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரீப்பின் சகோதரரான ஷேஹ்பாஸ் ஷரீப் பிரதமர்
பதவியில் அமர்த்தப்பட்டார். இம்ரானுக்கு எதிராகப் பாராளுமன்றத்திவ்

வாக்களித்த அவரது கட்சி உறுப்பினர்கள், ஆத்திரமடைந்த இம்ரானின்
ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர்.

பதவி நீக்கம் செய்யப்பட்டது முதல் இம்ரான் கான், விரைவாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

அக்டோபர் மாதமளவில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறி அரசாங்கத்துக்கு
நெருக்குதல்களை கொடுத்து வருகின்றார். அவரது கட்சியின் கட்டுப்பாட்டில்
இருந்த இரண்டு மாகாண சபைகளும் தற்போது கலைக்கப்பட்டுள்ளன.

இம்ரானுக்கு ஆதரவாக மார்ச் மாதம் 20ம் திகதி திங்கள் கிழமை லண்டனில் உள்ள
நவாஸ் ஷரீபின் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனிடையே மக்களால் தெரிவு செய்யப்படாத இன்றைய பாகிஸ்தான் பிரதமர்
ஷேஹ்பாஸ் ஷரீப் தலைமையிலான அரசு இம்ரான் கானை பொது வாழ்வில்
இருந்து ஓரம் கட்ட திடசங்கற்பம் பூண்டுள்ளது.

அவர் பற்றிய எந்தத் தகவல்களையும் வெளியிடக் கூடாது என ஊடகங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரானுக்கு எதிராக சுமார் 90 ஊழல் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யும் அளவுக்கு பாகிஸ்தான் அரசின் நிலை பரிதாபமாகி உள்ளது.

ஊழல் பற்றி பேசுவதற்கு ஷரீப் குடும்பத்துக்கும் பூட்டோ குடும்பத்துக்கும் தகுதி
உள்ளதா என்பதே இங்கு பிரதான கேள்வியாகும்.

1970ல் இடம்பெற்ற பாகிஸ்தான் பிரிவினையில் முன்னாள் பிரதமர் சுல்பிகார்
அலி பூட்டோவின் பங்களிப்பு பொதுவாகத் தெரிந்த ஒன்றே.

பாகிஸ்தான் பிரிவினை பற்றி ஹமூதுர் ரஹ்மான் சமர்ப்பித்த அறிக்கை யார் கைகளிலும் சிக்கி விடாமல் தனது தலையணைக்கு அடியில் வைத்து காப்பாற்றினார் பூட்டோ.

புpற்காலத்தில் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் சியாவுல் ஹக், பூட்டோவை
தூக்கிலிட இதுவும் ஒரு பிரதான காரணமாக இருந்தது.

பூட்டோ குடும்பத்தின் கடைசிப் பிரதமர் பெனாஸிர் பூட்டோ மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. அவரின் கணவர் ஆஸிப் அல் சர்தாரி திருவாளர் பத்து வீதம் என பிரபலமாக அழைக்கப்பட்டவர்.

இவ்வாறான பின்னணியில் அமெரிக்காவால் சதி மூலம் பதவியில் அமர்த்தப்படடுள்ள அரசில் ஆதிக்கம் செலுத்தும் ஷரீப்களும் பூட்டோக்களும் எப்படி ஊழல் பற்றி பேச
முடியும்? லாகூரில் உள்ள இம்ரான் கானின் இல்லம் தாக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் இன்றி தேடுதல் என்ற பெயரில் அங்கு அட்டகாசம்
புரியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட இம்ரான் கான்

“அரசாங்கத்தைப் பொருத்தமட்டில் ஒன்றில் என்னை சிறையில் அடைக்க
வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் அரசியல் அரங்கில் இருந்து என்னை
முழுமையாக அகற்ற வேண்டும்”; என்று கூறினார்.

இம்ரானின் இல்லம் சோதனையிடப்பட்டபோது குறிக்கிட்ட அவரது சகோதரி அதற்கான நீதிமன்ற ஆணை உள்ளதா என்று அதிகாரிகளைக் கேட்ட போது எமக்கு அதெல்லாம் தேவையில்லை என்று அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

இதில் இருந்து அவர்களின் நோக்கம் தெளிவாகின்றது. நிலைமை எவ்வாறு இருப்பினும் இன்றைய நிலையில் பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக இம்ரான் கானே காணப்படுகின்றார்.

அவருக்காகத் திகழும் ஆதரவாளர்கள் கூட்டத்தில் இருந்து இது தெளிவாகின்றது.
இவ்வாறான ஒரு பின்புலத்தில் இம்ரானை கைது செய்வது என்பது நாடு முழுவதும்
குழப்பங்கள் ஏற்படும் ஒரு நிலைமையைத் தோற்றுவிக்கலாம்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எதிர்பாராத விளைவுகளைத் தோற்றுவிக்கவும் கூடும்.
இவ்வாறான ஒரு நெருக்குதல் ஏற்படும் பட்சத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாத இந்த அரசாங்கத்தால் எந்தளவு நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் என்பதும் கேள்விக்குரியதே.

மிட்ல் ஈஸ்ட் ஐ இணையத்தில் வெளியாகி உள்ள ஒரு தகவலின் படி “சர்வதேச
நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு திட்டங்களை அமுல் செய்வதில் அரசியல்
வாதிகள் ஆர்வம் காட்டாமையால் அது தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது.

அரசாங்க மட்டத்துக்குள் இன்னமும் ஆழமான ஊழல்கள் காணப்படவே
செய்கின்றன. பொறுப்புக் கூறல் தன்மையில் பூஜ்ஜிய நிலை காணப்படும் ஒரு
கலாசாரத்தால் பாகிஸ்தான் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை உள்ளுரிலும்
வெளிநாடுகளிலும் தகர்ந்து போய் உள்ளது”.

சர்வதேச டிரான்ஸ்பெரன்ஸி நிறுவனத்தின் 2022ம் ஆண்டுக்கான ஊழல்
குறியீட்டு சுட்டெண்ணில் பாகிஸ்தான் 140வது இடத்தில் உள்ளது.

அந்த நாடு வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்பதாயின் இது ஒரு வரவேற்கப்படக் கூடிய நிலைப்பாடு அல்ல.

உலக நாடுகளில் மிகப் பெரிய அமைச்சரவை பாகிஸ்தானில்
தான் உள்ளது. அவர்கள் எல்லோருமே மக்கள் படும் துன்பங்களைப் புரிந்து
கொள்ளாமல் சொகுசு வசதிகளை அனுபவித்துக் கொண்டுள்ளனர்.

அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 30 மில்லியன் மக்கள் இன்னமும் உணவு உறைவிடம் உட்பட ஏனைய அடிப்படை வசதிகள் இன்றி அல்லல் படுகின்றனர். இவற்றில் கவனம் செலுத்துவது தான் இன்றைய முக்கிய தேவையாக உள்ளது.

மறுபுறத்தில் பாகிஸ்தானை துண்டாடி பங்களாதேஷை உருவாக்கிய
பாகிஸ்தனுடன் விரோதப் போக்குள்ள பலம்மிக்க அண்டை நாட்டு சக்திகள்
பாகிஸ்தானை வித்தியாசமான மேலும் நான்கு மாநிலங்களாக பிளவு படுத்துவதில்
இன்றும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.

இந்த சதிகளில் இன்றைய தெரிவு செய்யப்படாத ஷரீப் அரசும் பங்கேற்பது போலவே தகவல்கள் கசிந்துள்ளன.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...