மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழு, புதிய எல்லைகளை நிர்ணயித்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,714 ஆக குறைக்க முன்வந்துள்ளது.
இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஏறக்குறைய பாதியாகக் குறைத்து, நாடு முழுவதிலும் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களை பராமரிப்பதற்காக அரசால் செலவிடப்படும் பாரிய தொகை மிச்சமாகும்.
தற்போதுள்ள முறைப்படி, அடுத்த தேர்தலில் 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான ஐவரடங்கிய எல்லை நிர்ணய குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் இந்த பிரேரணை உள்ளடக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி அமைப்புகளின் எல்லைகளை நிர்ணயம் செய்யவும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை நவம்பரில் குறைக்கவும் குழு நியமிக்கப்பட்டது.
இது தொடர்பான வர்த்தமானியை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டார்.
இந்தக் குழுவில் மஹிந்த தேசப்பிரியவுக்கு மேலதிகமாக ஜயலத் ஆர்.வி.திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அறிக்கையை கையளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.