வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை(25.04.2023)செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை எடுத்துரைப்பதற்கு மக்கள் தமது இயல்புவாழ்வை நிறுத்தி நிர்வாக முடக்கலுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடவேண்டும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்தமயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை நிர்வாக முடக்கல் கடைப்பிடிக்கப்படுகின்றது.
வடக்கு – கிழக்கில் அரசின் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும் அரசு கொண்டு வரத் தீர்மானித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவுக்கு எதிராகவும் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள முடக்கலுக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மக்கள் பிரதிநிதிகளான நாம் எப்போதும் மக்களின் பக்கம் நின்றே செயற்படுவோம் என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.