இலங்கையில் அரை சொகுசு பஸ் சேவை 2023 மே மாதத்தின் பின்னர் சேவையில் இருந்து நீக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் பாரியளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டுதலின்படி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இயங்குகிறது என்றும், அரை சொகுசு பஸ் சேவையை சாதாரண சேவையாகவோ அல்லது சொகுசு பஸ் சேவையாகவோ மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
“அரை சொகுசு பஸ்களின் உரிமையாளர்கள் தங்கள் பஸ்களை சாதாரண பஸ் அல்லது சொகுசு பஸ்களாக மாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை மாற்றத்திற்காக உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. இது இலவசமாக செய்யப்படும்,”
தற்போது இயங்கி வரும் 430 அரை சொகுசு பஸ்களில், 20 பஸ்களின் உரிமையாளர்கள் மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.