ஒரு வாரத்தில் சுமார் 1800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் பருவமழை தொடங்குவதால், நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும், வாராந்தம் 1000 நோயாளர்கள் பதிவாகும் போதிலும், 500 நோயாளர்களே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியும் என்றார்.
டெங்குவின் இனப்பெருக்க இடங்களை அழிப்பதன் மூலம் டெங்கு நோயின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை 28,448 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 13,958 பேர் மேல் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்களே எனவும், பாடசாலைகளுக்கு அருகில் டெங்கு நுளம்புகள் பெருகுவது அதிகரித்துள்ளதாகவும், பாடசாலைகளைச் சுற்றியுள்ள சூழலை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 62 வீதமானவர்கள் 20 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.