ராகுல் காந்தி கைது : ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் பாஜக அரசு!

Date:

ராகுல் காந்தி மீது இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசின் நெருக்குதல்கள் இந்தியாவின் ஜனநாயகம் மீதான கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி கைது தொடர்பில் இந்தியாவின் தமிழ்நாட்டின் ‘சமரசம்’ என்ற சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது ராகுல் காந்தி, நாடு சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விரிவான உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தைத் திருடிய நீரவ் மோடி, லலித் மோடி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோடி துணை நிற்பதாகக் குற்றம்சாட்டிய ராகுல், ’அதெப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை’ என்று குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த மோடி சமூக மக்களை ராகுல் தவறாகப் பேசியதாகக் குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்தார்.

சற்றேறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2023 மார்ச் 23ஆம் நாள், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500இன் படி ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள்கள் அவகாசம் அளிப்பதாகவும் நீதிபதி வர்மா தீர்ப்பு வழங்கினார்.

வெறுப்பு வணிகர்களுக்கு எதிராக அன்பை ஆயுதமாக ஏந்தும் ராகுலின் பேச்சு எந்தச் சமூகத்திற்கும் எதிரானது அல்ல என்பது வெள்ளிடைமலை. இது குறித்து ’எந்தச் சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை’ என்று ராகுலும் விளக்கமளித்துள்ளார்.

தீர்ப்பு வந்த மறுநாளே வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இத்தீர்ப்பிற்கும், பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கும் நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 8(3) படி, எந்தவொரு குற்றத்திற்காகவும் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் பங்கேற்கவும் இயலாது.

இது திட்டமிட்ட பழிவாங்கல். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மூலம் பாஜக ஆட்சியின் அவலங்களைத் தோலுரித்துக் காட்டினார் ராகுல்.

மட்டுமின்றி நாடாளுமன்றத்தில் அதானி, ஜிஎஸ்டி, சீனாவின் ஊடுருவல் என்று ராகுல் கேட்ட கேள்விகளால் பாஜக திக்குமுக்காடிப் போனது. அதானி பிரச்னையை மடைமாற்றம் செய்வதுடன், தங்களைக் குறித்து யாரும் எதுவும் பேசிவிடக்கூடாது என்று ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக அரசு இன்று நெரித்துள்ளது.

குற்றப் பின்னணி உள்ள பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்படும் வேளையில், வெறுப்பு அரசியலையும் வன்மம் உமிழும் பேச்சுகளையும் தொடர்ந்து பேசி வரும் பாஜக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்க்கும் முயற்சியே அன்றி வேறில்லை.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவது வழக்கமான ஒன்று. ஆளும் கட்சியே நாடாளுமன்றத்தை முடக்குவதும், தங்களுடைய அராஜகத்தைத் தட்டிக் கேட்கும் ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் மீது சட்டத்தையே ஆயுதமாக்கி நடவடிக்கை எடுப்பதும் ஜனநாயகத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும்.

இது ராகுலின் மீதோ காங்கிரஸ் மீதோ தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல. ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...