அரசியலமைப்பு சார்ந்த சிறந்த ஆளுமையை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்துள்ளது: சமூக நீதிக் கட்சி தலைவர்

Date:

முஸ்லிம் அரசியலில் அரசியலமைப்பு சார்ந்த ஒரு சிறந்த ஆளுமையை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்துள்ளதாக சமூக நீதிக்கட்சி தலைவர் நஜா முஹமத் தெரிவித்தார்.
வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களின் மறைவு குறித்து அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான வை.எல்.எஸ். ஹமீத் அவர்களின் மரணச் செய்தி   பேரதிர்ச்சியாக இருந்தது.

முஸ்லிம் அரசியல் தளத்தில் நான் கண்ட ஒரு முக்கியமான அரசியல் ஆளுமையே சகோதரர் வை.எல்.எஸ். ஹமீத்.

2013 ஆம் ஆண்டு முதல் நான் கட்சி அரசியலில் ஈடுபடத்துவங்கியது முதல் பல்வேறு அரசியல் செயற்பாட்டாளர்களின் தொடர்பு எனக்கு கிடைத்தது.

முஸ்லிம் அரசியல் தளத்தில் நான் கூடுதலாக பழகிய தொடர்பு வைத்திருந்த ஒரு ஆளுமையே சகோ.வை.எல்.எஸ் ஹமீத்.

அவர் சார்ந்திருந்த கட்சி, அதன் கொள்கைகள், நடைமுறைகள், அதன் தலைமை குறித்து எமக்கு பாரிய விமர்சனங்கள் இருந்தாலும் நானும் சகோ.வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகள் குறித்து, குறிப்பாக அரசியலமைப்பு சீர்திருத்தம், அதிகாரப் பரவலாக்கம், தேர்தல் முறை மாற்றம் போன்ற விடயங்களில் நெருக்கமாக செயல்பட்டுள்ளோம்.

அரசியலமைப்பு குறித்து கோட்பாட்டு ரீதியாக நாம் பல விடயங்களை பல்கலைக்கழகத்திலும், புத்தகங்களிலும் கற்றிருந்தாலும் நடைமுறை ரீதியான விடயங்களை தர்க்க ரீதியாக, சகோதரர் வை.எல்.எஸ்.ஹமீதிடம் தனிப்பட்ட முறையிலும், அவரது எழுத்துக்கள் மூலமும் கற்றுக் கொண்டேன் என்றால் அது மிகை ஆகாது.

மேலும் அரசியலமைப்பு சீர்திருத்தம், அதிகாரப் பரவலாக்கம், தேர்தல் முறை மாற்றம் போன்ற விடயங்களில் முஸ்லிம் சமூகம் சார்ந்த நலன்கள் குறித்தும் உத்தேச மாற்றங்களால் முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்பட போகும் எதிர்மறை தாக்கங்கள் (Negative Impact) குறித்தும் ஆழ்ந்த அறிவும் தூரநோக்கும்  வை.எல்.எஸ். ஹமீதிடம் இருப்பதை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.

முஸ்லிம் அரசியல் தளத்தில் அவரோடு முரண் அரசியல் செய்பவர்களும் அரசியலமைப்பு சார்ந்த அவரது கருத்துக்களை ஆலோசனைகளை உள்வாங்கும் அளவுக்கு அவரிடம் அரசியலமைப்பு சார்ந்த புலமை இருந்துள்ளது.

மேலும் அவரிடம் அரசியலமைப்பு சார்ந்த புலமை மாத்திரமன்றி இத்துறை சார்ந்த பின்புலம் இல்லாதவர்கள் கூட விளங்கிக் கொள்ளும் அளவுக்கு விடயங்களை இலகுபடுத்தி முன்வைக்கக்கூடிய ஆற்றலும் சகோ.வை.எல்.எஸ் இடம் காணப்பட்டது.

மேலும் அரசியலமைப்பு சீர்திருத்தம், அதிகார பரவலாக்கம், தேர்தல் முறை மாற்றம் போன்ற விடயங்களில் முஸ்லிம் சமூகம் சார்ந்த நலன்களை முன் வைப்பதற்குரிய ஒரே வளவாளராக வை.எல்.எஸ். காணப்பட்டார்.

சிவில் சமூக அமைப்புக்கள், செயல்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்படும் பெரும்பாலான கலந்துரையாடல்கள், கருத்தரங்குகளில்  ஹமீதின் பங்கேற்பு தவிர்க்க முடியாத ஒன்றாக தொடர்ந்தும் இருந்து வந்துள்ளது.

குறிப்பாக 2015 நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியலமைப்பு மாற்றம், அதிகார பரவலாக்கம், தேர்தல் சீர்திருத்தம் குறித்து பாரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட காலம்.

இக்காலப் பிரிவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் நாமும் பல கலந்துரையாடல்களை கருத்தரங்களை கொழும்பிலும் கிழக்கிலும் நடத்தி இருந்தோம்.

மேலும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல்கள் மிகவும் பரவலாக மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் வை.எல்.எஸ் இன் பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருந்துள்ளது.

எந்த நேரமும் அவரை தொடர்பு கொண்டு நேரடியாகவும் தொலைபேசியிலும் அரசியலமைப்பு சார்ந்த விளக்கங்கள் சந்தேகங்களை கேட்க முடியும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் ஆர்வத்துடனும் தெளிவாகவும் விளக்கங்களை தருவார்.

அதேபோன்று அரசியலமைப்பு சார்ந்த ஆவணங்கள், வெளியீடுகள், அறிக்கைகள், வர்த்தமானி அறிவித்தல்கள் குறித்து தகவல் கிடைத்தால் என்னைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்வார்.

அவர் அரசியலமைப்பு சார்ந்த ஒரு சிறந்த வளவாளராகவும் ஆளுமையாகவும் இருந்தாலும் அவருக்குரிய அங்கீகாரமும் வாய்ப்புகளும் அவர் சார்ந்திருந்த கட்சி தலைமைகளால் வழங்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை இவ்விடத்தில் பதிவது பொருத்தம் என கருதுகிறேன்.

அவர் ஒரு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும் என நினைத்தவர்களில் நானும் ஒருவன்.
எனவே தான் 2020 பாராளுமன்றத் தேர்தலில் அவர் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட போது அவரது அலுவலகத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு அவர் ஏன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவேண்டும் என்பதற்கான நியாயங்களை எனது முக நூலில் பதிவிட்டேன்.

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநித்துப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை விட மிகவும் தகுதியானவர் வை.எல்.எஸ் என்பது எனது அபிப்பிராயம்.

அவ்வாறு வை எல் எஸ் இற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு முஸ்லிம் சமூகம் சார்ந்த பல்வேறு அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விடயங்களில் காத்திரமான பங்களிப்பினை அவரிடமிருந்து அவர் சார்ந்திருந்த கட்சித் தலைமைகள் பெற்றிருக்க வேண்டும்.

அவர் அந்தப் பணியினை செய்வதற்கு மிகவும் தகுதியானவரும் அந்த வரலாற்றுப் பணியினை நிறைவேற்றுவதற்கு அவர் தயாராக இருந்தார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு அந்த தலைமைகளால் அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

முஸ்லிம் அரசியல் தலைமைகளால் தகுதியானவர்களுக்கு உரிய அங்கீகாரமும் வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை என்பதற்கான சிறந்த உதாரணமே வை.எல்.எஸ்.ஹமீத்.

மேலும் அவருக்கு அந்த சந்தர்ப்பத்தினை வழங்கவில்லையே என்ற குற்ற உணர்வோடு அது சம்பந்தப்பட்டவர்கள் இருப்பார்கள் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.

ஏனெனில் வை.எல்.எஸ்.போன்ற தொரு ஆளுமைக்கான தேவை இன்றும் முஸ்லிம் அரசியல் தளத்தில் நிலவுகிறது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...