ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்தாலும் உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (01) கொண்டாடப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார செயல்முறையிலும் வலுவான செல்வாக்கைச் செலுத்தக்கூடிய சமூக சக்தியாக உள்ளனர். வரலாறு நெடுகிலும் நாம் எதிர்கொண்ட மற்றும் வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம்.
அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு உழைக்கும் மக்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
கடந்த வருடம் மே தினத்தைக் கொண்டாடும் போது, நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியில் காணப்பட்டதால், அனைவரும் கடுமையான நெருக்கடிகளையும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அந்த சவாலான காலங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கடினமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக, பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையின் உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்கு காட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பமாக இது இருப்பதோடு, இந்த இக்கட்டான நேரத்தில் குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்திச் செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எப்போதும் செயற்பட்டு வருவதோடு, அவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை வென்றெடுப்பதன் மூலம், உழைப்புக்குச் சரியான மதிப்புக் கிடைக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே இன்றைய நாளின் எமது எதிர்பார்ப்பாகும்.