தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்கள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸே முடிவெடுக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மஸீஹுத்தீன் நயீமுல்லாஹ் தெரிவித்தார்.
முன்னர் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பாக இருந்த ஐக்கிய தேசிய கூட்டமைப்பு சார்பில் அலிசப்ரி ரஹீம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய போதும் அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என, அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக ‘நியூஸ் நவ்’ விசாரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட குறையாக இருந்து வந்த முஸ்லிம் எம்.பி ஒருவரை பெற்றுக் கொள்ளும் கனவை நனவாக்கிக்கொள்ளும் பொருட்டு புத்தளம் வாழ் பொது மக்கள், புத்தி ஜீவிகள், உலமாக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் சில சுயாதீன உறுப்பினர்களும் ஒன்றிணைந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் ‘தராசு’ சின்னத்தின் கீழ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
அத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றே அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
தேர்தலுக்கு முன்னர் மக்கள் காங்கிரஸ் எமது கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்து கொண்டது.
அதன் பிரகாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 4 வேட்பாளர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கே உண்டு என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வொப்பந்தம் இன்றைக்கும் செல்லுபடியாகும் அதனை மீறி நடவடிக்கை எடுக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு இல்லை, அவ்வாறு ஒப்பந்தத்தை மீறி நடவடிக்கைகள் மேற்கொள்வது தார்மீகமாகாது எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இது விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தாம் நம்புவதாகவும் நயீமுல்லாஹ் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் போதும் அதனை தொடர்ந்து வந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போதும் கட்சி தீர்மானத்திற்கு மாற்றமாகவும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்த விவகாரத்தில் அலி சப்ரி ரஹீம் தமது கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியூதீன் கருத்து வெளியிட்டிருந்தாலும் அது தொடர்பாக எந்த விதமான உத்தியோகப்பூர்வ கடிதங்களும் இதுவரையில் தனக்கு கிடைக்க வில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்
அவ்வாறான உத்தியோக பூர்வ கடிதமொன்று எமக்கு கிடைக்குமிடத்து குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் எமது கட்சி தாமதியாது உரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.