G7 தொழில்வள நாடுகளின் உச்சநிலை மாநாடு இன்று ஜப்பானில் நடைபெறுகிறது. உக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது தடைகளை விதிப்பது, சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைச் சமாளிக்கும் வழிகளை ஆராய்வது – அந்த இரண்டு முக்கிய அம்சங்களில் G7 தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
பிரிட்டனும், ஜப்பானும் தற்காப்பு உறவை வலுப்படுத்துவதற்காக ஹிரோஷிமா (Hiroshima) உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. ஜப்பானில் இனி நடைபெறவிருக்கும் கூட்டு ராணுவப் பயிற்சியில் பிரிட்டன் கூடுதல் துருப்புகளைப் பங்கேற்கச் செய்ய உடன்பாடு வழியமைக்கும். பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களில் இணைந்து பணியாற்றவும் இரு நாடுகளும் முயல்கின்றன.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் (Rishi Sunak), ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவைச் (Fumio Kishida) சந்தித்தபோது இருதரப்பு உடன்பாடு கையெழுத்தானது. இந்தோ – பசிபிக் வட்டாரத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் டொக்கியோவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்துகொள்ளப்பட்டதாகத் திரு. சுனாக் கூறினார்.