இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்பும் வகையில் முதற்தடவையாக இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டுக் கமிட்டி சந்திப்பில் இலங்கையும் சவூதியும் ஒத்துழைத்து செயற்பட முடியுமான 63 பகுதிகள் அடையாளங்காணப்பட்டன.
இலங்கையிலிருந்து விஜயம் செய்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான தூதுக் குழுவினர் கடந்த வார இறுதியில் சவூதி அரேபிய மனிதவள துணை அமைச்சர் கலாநிதி அப்துல்லாஹ் அபூ துனைன் தலைமையிலான குழுவினரை ரியாதில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட முடியுமான 63 பகுதிகள் இனங்காணப்பட்டதாக இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகளினதும் புதிய பரிணாமமாக, அரசியல் ஆலோசனைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, அரசியல் ஆலோசனைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு நாடுகளதும் வெளியுறவு அமைச்சுக்களிடையில் அடிக்கடி கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இது நமது உறவுகளை மேம்படுத்துவதற்குப் பெரிதும் உதவும் எனத் தெரிவித்தார். சர்வதேச அரங்கில் சவூதி அரேபியா முன்னணி வகிபாகம் ஏற்கும் வகையில் உருவாகி வருவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, அரசியல் ஆலோசனைகளுக்கான ஒப்பந்தம் இரு தரப்பு உறவுகளில் முக்கியமான அடைவாகும் எனத் தெரிவித்தார்.
அரசியல் ஆலோசனைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் இது அபாரமான நன்மைகளைக் கொண்டது எனக் கருத்து வெளியிட்ட சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் ஹம்ஸா, இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்களைக் கலந்துரையாட இது உதவுகிறது எனவும் தெரிவித்தார்.
இலங்கை – சவூதி அரேபியா உறவுகள் சிறப்பான நிலையை எட்டியுள்ளதுடன், சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைத்து வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள சிறப்பான உறவுகளை அதிக அளவில் ஒருங்கிணைக்க இந்தப் பயணம் உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனக் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அவர்கள், இந்தச் சந்திப்பின் விளைவுகள் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, விவசாயம் மற்றும் மனிதாபிமானப் பணி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பங்களிக்கும் எனவும் தெரிவித்தார்.