ஏறாவூர் நகரசபை , ஏறாவூர் வாசிப்பு வட்டம் மற்றும் PSP சமூக நலன் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய புத்தக சந்தையை நோக்கி உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் திரண்டு வருகின்றனர்.
ஏறாவூர் வரலாற்று பதிவில் இதுவே முதற் தடவையான பிரம்மாண்டமான புத்தகக் கொண்டாட்டம் என ஏறாவூர் நகரசபையின் செயலாளரும் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.
இந்திய மற்றும் இலங்கையின் முன்னணி நூல் நிலைய உரிமையாளர்கள் இப்புத்தக கொண்டாட்டத்தில் தங்களது விற்பனை நிலையங்களை அமைத்துள்ளனர்.
வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கிலே இப்புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதே வேளை பாரம்பரிய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளாக பாடல், கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம், பறைமேளக்கூத்து, பக்கீர்பைத், சீனடி சிலம்படி, நடன நிகழ்வுகளும் மாணவர்களுக்கான கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சிகளும் சின்னஞ் சிறார்களின் கலை நிகழ்வுகளும் தொடராக ஆற்றங்கரை டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு அரங்கில் காலை 9 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை இடம்பெற்று வருகின்றது.
இந்திய எழுத்தாளர்கள் மற்றும் உள்ளூர் ,வெளியூர் எழுத்தாளர்கள் அநேகர் பங்கேற்கும் இலக்கியச் சந்திப்புகளும் நடைபெற்று வருகின்றன.
இப்புத்தக கொண்டாட்ட நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், வாசகர்கள், கலைஞர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்,பிரதேச முக்கியஸ்தர்கள், புத்தகக் காதலர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளும் இப்புத்தக திருவிழா எதிர்வரும் மே மாதம் பதின்நான்காம் திகதி வரை நடைபெறவுள்ளது.
(ஏரூர் உமர் அறபாத் )