வெசாக் தினத்திற்கு அடுத்த நாள் களுத்துறை தெற்கு, காலி வீதியிலுள்ள சிசிலியன் வோர்க் எனும் விடுதியின் பின்புறமுள்ள புகையிரத கடவைக்கு அருகிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமியின் கால் மற்றும் மார்பு பகுதியிலிருந்து அவதானிக்கப்பட்ட பல் அடையாளம் பிரதான சந்தேக நபருடையதா என சிறப்பு மருத்துவ பகுப்பாய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனுஷ்க கயான் சகபந்து எனும் பிரதான சந்தேக நபரை நாளை மறு தினம் செவ்வாய்க் கிழமை, சிறப்பு மருத்துவ பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்குக்காக மருத்துவர் முன்னிலையில் ஆஜர்படுத்த, களுத்துறை நீதிவான் நீதா ஹேமமாலி ஹால்பந்தெனிய உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பல் அடையாளம் பிரதான சந்தேக நபருடையதா வேறு ஒருவரினுடையதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க இந்த மருத்துவ பகுப்பாய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுவரை இவ்விவகார விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிசார் முன்னெடுத்த நிலையில், அவர்களின் விசாரணைகளில் வெளிப்பட்ட விடயங்களை மையப்படுத்தி, மனித படுகொலைகள் விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி இதுவரையிலான விசாரணைகளில், 16 வயதான சிறுமி, கைதாகியுள்ள யுவதியினாலும் அவரது காதலனாலும், பிரதான சந்தேக நபராக கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள 29 வயது நபருக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
M.F.M.Fazeer