இலங்கை முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் கல்விமான்களது ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்று 1973 ஆம் ஆண்டு பேருவளையில் பிரபல கொடைவள்ளலும் சமூக சேவகருமான மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜாமிஆவின் கல்வி பயணத்துக்கு 50 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பொன்விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகள் ஜூன் மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உலமாக்கள் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத புத்திஜீவிகள் அரசியல் பிரமுகர்கள்,சிவில் அமைப்புகளது பிரதிநிதிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
அந்த நிகழ்வைத் தொடர்ந்து ஜாமிஆ நளீமிய்யாவில் ஏழு வருட கற்கை நெறியை நிறைவு செய்த சுமார் 240 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெறவிருக்கிறது.
கடந்த அரை நூற்றாண்டுகளாக இஸ்லாமிய கல்வித் துறையில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, சமூகத்துக்கு அறிவுத் தலைமைத்துவம் வழங்கிய இக்கலா நிலையம் சர்வதேச மட்டத்தில் பல பல்கலைக் கழகங்களது தொடர்பைக் கொண்டிருக்கின்றது.
மேலும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளையும் அது உருவாக்கியிருக்கிறது. இஸ்லாமிய தஃவா,கல்வி மற்றும் சமூகப் பணிகளில் அதன் பட்டதாரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை அதன் பழைய மாணவர்களின் கணிசமான தொகையினர் அரச, மற்றும் தனியார் துறைகளில் நிர்வாக பொறுப்புகளை வகித்து வருவதும குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்களில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கலாநிதி பட்டங்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.