தாக்கப்பட்ட ஓமான் முதலீட்டாளரை தக்க வைத்துக் கொள்ள முயற்சி: தாக்குதலின் பின்னால் மொட்டுக் கட்சி இராஜாங்க அமைச்சர்

Date:

கட்டான – ஹல்பே – கோபியவத்த பிரதேசத்தில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான அல் ஒபைதானி ஆடைத் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து குறித்த நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தி நாட்டை விட்டுச் செல்லவிருந்த நிலையில் இவரது தொழிற்சாலையை தடையின்றி தொடர்வதற்கான மாற்று தளத்தை வழங்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

மார்ச் 30ஆம் திகதியன்று தொழிற்சாலை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவொன்றினால் ஓமான் முதலீட்டாளர் மற்றும் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரியும் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் கம்பஹா மாவட்ட அரசியல்வாதியொருவர் இருப்பதாகச் சொல்லப்பட்ட போதும் இது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் தமது தொழிற்சாலையை மூடிவிட்டு ஓமான் நாட்டு முதலீட்டாளர் நாட்டை விட்டு வெளியேறப்போவதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த விடயத்தில் தலையிட்ட இலங்கை முதலீட்டுச் சபை, தொழிற்சாலை உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், குறித்த நிறுவனம் தற்காலிகமாக அதன் செயல்பாடுகளை இடைநிறுத்திய போதிலும், இலங்கையில் தொடர்ந்து செயல்படும் வகையில் தொழிற்சாலை நிர்வாகத்துடன் தாம் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த தருணத்திலிருந்து, ஓமான் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அந்தந்த சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் செயல்ரீதியான தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலீட்டுச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னால் மொட்டுக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுரத்தவே உள்ளதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஓமான் நாட்டு அராபிய முதலீட்டாளர்களின் தொழிற்சாலையில் கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 500 குடும்பங்கள் தொழில் செய்து அந்த வருமானத்தில் வாழ்ந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்தார்.

இவ்வாறு எமது நாட்டில் முதலிடும் முதலீட்டாளர்களை அரசியல்வாதிகள் தமது சொந்த நலன் கருதி ஆட்கள் வைத்து தாக்குவதனால் எமது நாட்டுக்கு எவரும் முதலிட முன்வர மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் இவ்விடயமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரான் அலசைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளார். ஜனாதிபதி சம்பந்தப்பட்டவரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...