வெளிநாடு செல்ல முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்ட களத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, காஞ்சன ஜயரத்ன ஆகியோர் வெளிநாடு செல்ல தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது சம்பந்தமான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது தரப்பு வாதிகள் வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்படவில்லை என்பதால், அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயண தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய கோட்டை நீதவான் திலின கமகே, மகிந்த ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு எதிரான வெளிநாட்டுப் பயண தடையை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.