ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 288 பேர் பலியாகினர் . 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்தெரிவிக்கிறது.
ஏராளமானோர் இடிபாடு களில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. அவசரகால பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர்.
கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து, மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி ரயில் எண் 12864 என்ற பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்ற போது, மாலை 7:00 மணிக்கு பெங்களூரு – ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அந்த ரயிலின் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தின் மீது கவிழ்ந்தன.
அப்போது, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி, எதிர்புறத்தில் இருந்து ரயில் எண் 12841 என்ற ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது.
இந்த ரயில், தடம்புரண்டு கிடந்த பெங்களூரு – ஹவுரா ரயில் மீது பயங்கரமாக மோதியதில் இதன் பெட்டிகளும் கவிழ்ந்தன.
#WATCH | Morning visuals from the spot where the horrific train accident took place in Odisha’s Balasore district, killing 207 people and injuring 900 pic.twitter.com/yhTAENTNzJ
— ANI (@ANI) June 3, 2023
மோதிய வேகத்தில், கோரமண்டல் எக்ஸ்பிரசின் பெட்டிகள், அடுத்த தடத்தில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி கவிழ்ந்தன.
சில நிமிடங்களில் அந்த பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. எந்த பக்கம் திரும்பினாலும், அழு குரல்களும், உதவி கோரும் பயணியரின் கதறலும் காண்போர் மனதை நொறுக்கியது.
விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தண்டவாள பக்கவாட்டில் சிதறிக் கிடந்தன. படுகாயம் அடைந்தவர்கள் நகர முடியாமல் ரத்த வெள்ளத்தில் முனகியபடி கிடந்தனர். நொறுங்கிக் கிடந்த ரயில் பெட்டிகளில் சிக்கி பலர் வெளியேற முடியாமல் கதறினர். காயங்களுடன் ரயிலில் இருந்து வெளியேறியவர்கள் ரத்த வெள்ளத்தில், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வெறித்த பார்வையுடன் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 283 பேர் உயிரிழந்ததாகவும், 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. படுகாயம் அடைந்தவர்கள் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
இரண்டு பயணியர் ரயில்களிலும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இரவு நேரம் என்பதால், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பலியானர்களின் உடல்கள் மீ்ட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.