எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெறுவதற்காக சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இழப்பீடு வழக்கை ஆராய்வதற்காக சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு உதவ ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர ஆகியோரே அவர்கள்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் இவர்கள் நியமிக்கப்பட்டதாக அதன் தலைவர் சட்டத்தரணி அசேல ரெக்கவ தெரிவித்தார்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் ஊடாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஆதரவை இந்த வழக்கிற்கு வழங்குவதாகவும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.