கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை மற்றும், 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளின் அவசியம் தொடர்பில் விரைவாக தீர்மானமொன்றுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி நிபுணத்துவக் குழுவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது, மாணவர்களை 13 வருடங்கள் பாடசாலைக் கல்வியில் தக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை மற்றும், 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் அவசியமா? என்பதுத் தொடர்பில் விரைவாக தீர்மானமொன்றுக்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு சட்டரீதியாக குறித்த ஒரு மாதத்தை அறிவிக்க உள்ளதாகவும், இக்கட்டான சூழ்நி்லைகளில் தவிர பரீட்சை நடத்துவதற்கான மாதத்தை மாற்றுவதாக இருந்தால், பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் தரமான கல்வி வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக ஆய்வு அலுவலகங்கள் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளார்.
இலங்கையை பிராந்திய கல்வி மையமாக மாற்றும் நோக்கத்துடன், ஜனாதிபதியின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட ‘கல்வித்துறை அமைச்சர் குழுவை நியமிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.