அலி சப்ரி ரஹீமுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய தேசிய கூட்டமைப்பு புத்தளம் சிவில் சமூக நிறுவனங்களின் ஒன்றியத்திற்கு கடிதம்!

Date:

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை சம்பந்தமாக ஐக்கிய தேசிய கூட்டமைப்பு புத்தளம் சிவில் சமூ நிறுவனங்களின் ஒன்றியத்தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கடிதத்தில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவற்காக தங்களால் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தங்களது தலைமையில் உலமாக்கள், பொது நல அமைப்புகள், புத்தி ஜீவிகள், அரசியல் ஈடுபாட்டாளர்கள் அனைவரும் ஒருங்கே இணைந்து அமைத்துக் கொண்ட சிவில் சமூக நிறுவனங்ளின் ஒன்றியத்தின் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வென்றுகொள்ள முடிந்தது.

அனைவரது வேண்டுகோளுக்கும் இணங்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) மற்றும் வேறு சில கட்சி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களையும் சேர்த்து ஒரு கூட்டணியாக எமது கட்சியான முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் (MNA)  தற்போதைய ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் (UNA)) தராசு சின்னத்தின் கீழ் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்து உங்களது நீண்டகால முயற்சிக்கு எம்மால் இயன்ற பங்களிப்பையும் நல்க முடிந்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

என்றாலும் துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த அரசாங்க காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பின் போதும் அதனை தொடர்ந்து வந்த ஏனைய வாக்கெடுப்புக்களின் போதும் தான் தெரிவு செய்யப்பட காரணமாக இருந்த பெரும்பான்மையான வாக்காளர்களதும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினதும் வேண்டுகோளை துச்சமென மதித்து அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் புத்தளம் மாவட்ட மற்றும் நாடளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களது பலத்த கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியமையை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

அவரை ஒரு வேட்பாளராக களமிறக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவர் செய்த குற்றங்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையொன்றை மேற்கொண்டு அவரை தமது கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கி விட்டதாக ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்திருந்த போதிலும், பொதுத் தேர்தலின்போது அவர்கள் எமது கட்சியுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தமது தீர்மானத்தை எமக்கு உத்தியோக பூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க தவறியமையால் அவ்விடயத்தில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பினால் மேலதிக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள முடியாமல் போனது.

ஆதலால், தனது கட்சிக்கோ வேறு எந்த சக்திகளுக்குமோ கட்டுப்படாத, தன்னிச்சையாக செயற்படும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே அவர் தொடர்ந்தும் இயங்கி வருகிறார் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்நிலையில் தான் கடந்த மே மாதம் 23ம் திகதி காலை தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகள் கடத்தல் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் தண்டப் பணம் செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு வாக்களித்த புத்தளம் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி அவரை வேட்பாளராக நிறுத்திய அரசியல் கட்சிகள் உட்பட ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் கலங்கம் கற்பிக்கும் விதத்திலேயே இக் கடத்தல் விவகாரம் பரவலாக பேசப்படுகிறது.

அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் கூட சிறுபிள்ளைத் தனமானதும் கேளிக் கூத்தானதாகவுமே அமைந்திருந்தது. அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட வேண்டும் என நாளுக்கு நாள் எமக்கு கோரிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன.

கட்சியின் ஒழுக்காற்று கோவை மற்றும் எம்மால் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தங்களின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள எவ்வாறு நாம் கடமைப்பட்டுள்ளோமோ, அதுபோலவே சகல கட்சிகளையும் புத்தளம் மாவட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களையும் உள ரீதியாக ஒன்றிணைத்து, அனைவரது வாக்குகளையும் ‘தராசு’ சின்னத்துக்கு பெற்றுக் கொடுத்து, அவர்களது நீண்ட கால கனவை நனவாக்க முன்னின்று உழைத்த உங்களது ஒன்றியத்துக்கும் மேற்படி விடயத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை அணுகி விளக்கம் கோரவும் ஆலோசனைகளை வழங்கவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாலான தார்மீகப் பொறுப்பு உள்ளது என்றும் கருதுகிறோம்.

எனவே, உங்களது ஒன்றியத்தினை அவசரமாக ஒன்றுகூட்டி மேற்படி விவகாரம் சம்பந்தமாக கலந்துரையாடி இது தொடர்பில் சட்ட ரீதியாக இயங்கும் வகையிலான உங்களது ஆலோசனைகள் ஏதுமிருப்பின் அதுபற்றி தாமதியாது எமக்கு அறியத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...