அத்தனகல்ல பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளராக கடந்த 3 வருடங்களாக கடமையாற்றிய நிர்வாக சேவை அதிகாரி திரு.சமீர ஜெயவர்த்தன அவர்கள் கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்க்கிள் மண்டபத்தில் கடந்த 10.06.2023 சனிக்கிழமை இடம்பெற்றது.
அதேவேளை கஹட்டோவிட்ட பிராந்தியத்தில் கடந்த 8 வருடங்களாக கிராம சேவை அதிகாரியாக கடமையாற்றிய ஜானக சுதர்சன அவர்களுடைய சேவைகளை பாராட்டும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம். முஹம்மத் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கௌரவ அதிதியாக நிட்டம்புவ சாந்த அந்தோனி தேவாலயத்தின் அருட்சகோதரர் கிருள் ஜயந்த கலந்துகொண்டார்.
அதுமட்டுமல்லாது கஹட்டோவிட்ட பள்ளிவாசல்களின் தலைவர்கள்,பாடசாலை அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கௌரவிப்பு நிகழ்வு இப்பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பான நிகழ்வு என்றே குறிப்பிடவேண்டும்.
ஏனெனில், இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற சமீர ஜெயவர்தன இப்பிரதேச மதத்தலைவர்களின் பங்களிப்பின் ஊடாக கட்டியெழுப்பிய சகவாழ்வையும் அதற்கான சான்றையும் அடையாளப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாக இந் நிகழ்வு அமைந்தமை,100 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட கஹட்டோவிட்ட மற்றும் திஹாரிய பிரதேசத்தில் வாழும் மக்களின் நற்பண்புகளை இந்நிகழ்விலே கலந்துகொண்ட சமீர ஜயவர்தன அவர்கள் உட்பட வேறு பல பெரும்பான்மை சமூக பிரமுகர்களும் சிலாகித்துக் கூறியமை, கஹட்டோவிட்டாவின் சமூகத்தலைமைகள் அனைவரும் இணைந்து கூட்டாக இவர்களை கௌரவித்து தங்களுடைய சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியமை, இவை அந்த நல்ல நிகழ்வின் சிறப்பம்சங்கள்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற முன்னாள் அத்தனகல்ல பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் சமீர அவர்கள்,
தன்னுடைய சேவைக் காலத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை கலந்துகொண்டோர்களோடு உணர்வுபூர்வமாக பகிர்ந்துகொண்டார்.
தான் பின்பற்றுகின்ற பௌத்த மதத்தின் காருண்யத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு இன வேறுபாடு இல்லாத சூழ்நிலையை உருவாக்குவதற்காக தன்னாலான பங்களிப்பை செய்தார் என்பதையும் அதற்கு எவ்வாறு பிரதேச மதகுருமார்கள் பங்களிப்பு செய்தார்கள் என்பதையும் அழகாக தெளிவுபடுத்தினார்.
தான் இந்த பொறுப்புக்காக வருகின்ற போது 2019ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை இருந்த நிலையிலும் எவ்வாறு இப் பணியை செய்ய முடியும் என்ற சவாலுக்கு மத்தியிலும் தான் இந்த பொறுப்பை நிறைவேற்றியதை நினைவு படுத்தி, அப்பொறுப்பை ஏற்கும்போது தனக்கு வழங்கப்பட்ட அவ்வாறான அறிவுரைகள் குறித்தும் குறிப்பிட்டார்
இருப்பினும் தான் பின்பற்றுகின்ற மதம் போதிக்கின்ற காருண்யத்தின் அடிப்படையில், எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும் எல்லோருக்கும் அன்பு காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் இப்பிரதேசத்திலே அப்படியான ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு பாடுபட்டதையும்
தனக்கும் எம்.எம்.முஹம்மத் முன்னாள் ஆணையாளருக்கும் இடையே நிலவுகின்ற மரியாதை கலந்த உறவையும் பற்றி தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் திரு சமீர ஜெயவர்தன அவர்களின் சேவைகளை பாராட்டும் வகையில், கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ யின் தலைவர் சமூக சேவகர் அல்ஹாஜ் பிர்தௌஸ் அவர்களாலும் கஹட்டோவிட்ட அல் இமாம் ஷாபி நிலையத்தின் தலைவர் அஷ்ஷேக் எம்.எஸ் அப்துல் முஜீப் அவர்களாலும் இக்ரா பாலர் பாடசாலை பொறுப்பாசிரியையினாலும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவற்றை ஊர் பிரமுகர்கள் இணைந்து கூட்டாக வழங்கியமை விசேட அம்சமாகும்.
அதேநேரம் கடந்த 8 வருடங்களாக இப்பகுதியில் பணியாற்றிய திரு ஜானக சுதர்சன அவர்களுக்கும் ஊர் மக்கள் சார்பாக நினைவுச் சின்னங்கள் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய திரு ஜானக நன்றியுரை செய்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஹேரத் ஆகிய இருவரும் இப்பிரதேசத்தில் சகவாழ்வு மேலோங்குவதற்கு முஸ்லிம்கள் எவ்வாறு பங்களிப்பு செய்கின்றார்கள், முஸ்லிம்களிடம் காணப்படும் நல்ல பணிகள் என்பன குறித்து பாராட்டிப் பேசியமை நிகழ்வின் மற்றொரு அம்சமாகும்.
நிகழ்வின் மற்றொரு அம்சமாக இறைத்தூதர் முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்து சிங்கள மொழியில் வெளியான “சந்த தெக்கட்ட சந்த” நூல் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உண்மையில் இந்நாட்டில் சிறுபான்மை மக்களும் பெரும்பான்மை மக்களும் இணைந்து செயலாற்றுகின்ற போது எவ்வாறு சமூகத்திலே நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந் நிகழ்வு சிறந்த ஒரு உதாரணமாகும்.
இந்த நல்ல நிகழ்வை கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏயின் தலைவர் சமூக சேவகர் அல்ஹாஜ் பிர்தௌஸ் அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.