படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும், பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பட்ட சான்றுப் பொருட்கள் தொடர்பில் இதுவரை அறிக்கை கிடைக்காமை தொடர்பில் அவதானம் செலுத்தி, அந்த அறிக்கைகளை விரைவாகப் பெற நடவடிக்கை எடுக்குமாறு சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய இதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.
இந்த விவகாரத்தில் பகுப்பாய்வுகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு, சந்தேகத்துக்கு இடமான இரத்த மாதிரிகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் பல அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதும், அந் அறிக்கையை பெற்றுக்கொள்வதில் தாமதம் காணப்படுவதை அவதானிப்பதாக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய திறந்த மன்றில் சுட்டிக்கடடினார்.
அவசியம் ஏற்படின் இரசாயன பகுப்பாய்வாளருக்கு ஞாபகமூட்டல் அறிவித்தலை அனுப்பவும் சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவித்த நீதிவான் அறிக்கைகளைப் பெற உடனடியாக நடவடிக்கைஎ டுக்குமாறு சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் தினைக்களத்துக்கு உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
பொரளை பொது மயான வளாகத்தினில் டப்ளியூ. பி. கே.யூ. 8732 எனும் தனது காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், கடந்த 2022 டிசம்பர் 15ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் குற்றுயிராய் மீட்கப்பட்டிருந்தார்.
பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருளப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
M.F.M.Fazeer