கடந்த 2010 தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கஹவத்தை கலாச்சார மத்திய நிலைய நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வந்த இடம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்ட இரத்தினபுரி மாவட்ட கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் “இக்காணி அனர்த்தங்கள் மிக்கது, நிர்மாணப் பணிகள் உடன் நிறுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் கலாச்சார நிலையத்தை நிர்மாணிப்பதே மிகப் பொருத்தம்” என 2011.07.25 ஆம் திகதி கஹவத்தை பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் கேட்டுக்கொண்டது.
தொடர்ந்து அக்கடித்தில், “அம்பிளிபிட்டி-இரத்தினபுரி பிரதான வீதியை முன்னோக்கி அமைந்துள்ள 7 மீட்டர் உயரம் மிக்க மேட்டுநிலத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கஹவத்தை கலாச்சார மத்திய நிலையத்தின் நிலம் தொடர்பில் எங்களால் எதுவும் உறுதியளிக்க முடியாது.அத்துடன் இந்த இடத்தில் மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. தற்போதைய நிர்மாணப் பணிகளை தொடராமல் இருப்பதே மிகப் பொருத்தமாகவுள்ளது.
எனினும் குறித்த இடத்தில்தான் கலாச்சார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளை நீங்கள் தொடருவதாயின் காணியை சுற்றி தரமான கொங்றீட் மதிலொன்று அமைக்கப்பட வேண்டும்.
அத்துடன் நீர் வலிந்தோடுவதற்கான வாய்க்கால் தொகுதியொன்றும் அமைக்கப்பட்டு நிலத்தின் உறுதி மீள உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என அக்கடிதத்தின் ஊடாக அறிவுறுத்தியிருந்தது.
இரத்தினபுரி கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் மேற்படி அறிவுறுத்தல்கள் எதனையும் கருத்திற்கொள்ளாது கஹவத்தை கலாச்சார மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்த கஹவத்தை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டு வரை சுமார் 2.5 மில்லியன் ரூபாவை அநியாயமாக செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டு 8.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி கலாச்சார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளுக்கென 3.2 மில்லியன் ரூபாவை கஹவத்தை பிரதேச செயலகம் அரசிடமிருந்து பெற்றுக்கொண்டது.
அத்துடன் 1 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளை மாத்திரம் முன்னெடுத்த கே.பி.கன்ஸ்ரக்சன் நிறுவம் 2.13 மில்லியன் ரூபாவை கட்டணமாக பெற்றுக்கொண்டுள்ளதை தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதன் அடிப்படையில் சுமார் 1 மில்லியன் ரூபா அளவில் எந்தவொரு நிர்மாணப் பணியையும் மேற்கொள்ளாமல் கே.பி.கன்ஸ்ரக்சன் நிறுவனம் தவறான முறையில் பெற்றுக்கொண்டுள்ளதையும் மேற்படி அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இது தொடர்பாக கஹவத்தை றஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய குணவங்ச விமல தேரர் கருத்து தெரிவிக்கையில்
“கஹவத்தை கலாச்சார மத்திய நிலையம் நிர்மாணிப்பு தொடர்பில் தவறான நடவடிக்கைகள் பல இடம்பெற்றுள்ளன. இதற்கான காணித் தெரிவு முதல் நிர்மாணப் பணிகள் வரை அதிகார துஷ்பிரயோகங்களும் இலட்சக்கணக்கான ரூபா நிதி மோசடிகளும் நிகழ்ந்துள்ளன.
இரத்தினபுரி கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவுரைகளை மீறி நிர்மாணப் பணிகளைத் தொடர்ந்து மக்களின் வரிப்பணத்தை அநியாயப்படுத்தியுள்ள அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு மக்கள் உரிமைகள் மீள உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என அவர் அழுத்தமாக தெரிவிக்கிறார்.
இலங்கை அரசு மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பி கலாச்சார விழுமியங்களை பின்பற்றி வாழும் மாணவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் 2010 ஆம் ஆண்டு அப்போதைய கலாச்சார அமைச்சர் திருமதி பவித்ரா வண்ணியாராச்சின் தலைமையில் நாடலாவிய ரீதியில் பிரதேச செயகங்கள் தோறும் பல பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுடன் கலாச்சார மத்திய நிலையங்களை ஸ்தாபிக்கும் பணியையை அரசு ஆரம்பித்தது.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் கஹவத்தை பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் 13 வருடங்களைக் கடந்தும் இன்னும் முற்றுப்பெறவில்லை.
இதனால் இங்குள்ள மாணவ சமுதாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கலாச்சார மேம்பாட்டுக்கான ஒழுங்குகளையும் முன்னெடுக்க முடியாத அவல நிலையால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
“அரசு கஹவத்தை கலாச்சார மத்திய நிலையத்தை அமைத்துக் கொடுத்திருந்தால் இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் நன்மை அடைந்திருப்பார்கள்.பலர் கலைத் துறையில் சாதனை படைத்திருப்பார்கள்.
எமது கிராமியப் பெண்களின் வாழ்வாதரப் பிரச்சினைகளுக்கும் இந்நிலையத்தினால் தீர்வுகள் எட்டப்பட்டிருக்கும்”, என நடனக் கலை ஆசிரியர் சகுந்தலா பியதர்ஷனி தெரிவிக்கிறார்.
“கடந்த 2018முதல் தனது வீட்டில் நடனக் கலை பயிற்சி வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. ஒருசில சங்கீதக் கருவிகளின் துணையுடனேயே இம்மாணவர்களுக்கு இசை கற்பிக்கப்படுகிறது.எனினும் இம்மாணவர்கள் கலைத் துறையில் மிகவும் திறமை மிக்கவர்கள்.
ஏனைய இடங்களில் போன்று எமது கலாச்சார மத்திய நிலையமும் அமைக்கப்பட்டிருந்தால் இம்மாணவர்களின் திறமைகளை முழு இலங்கை மக்களும் கண்டிருப்பார்கள்”, என அவர் மிகுந்த வேதனையுடன் கதைக்கிறார்.
கஹவத்தை கலாச்சார மத்திய நிலையம் தொடர்பில் ஆசிரியை சகுந்தலாவின் கருத்தை ஆதரிக்கும் வகையிலேயே கஹவத்தை பெண்கள் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த 2013 முதல் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டு பாழடைந்த இடமாகவும் பாதுகாப்பற்ற இடமாகவும் மாறியுள்ள கஹவத்தை கலாச்சார மத்திய நிலையக் கட்டிடம் தொடர்பில் அப்பிரதேசத்தில் தேநீர் கடையொன்றை நடத்தி வரும் சிதாரா தர்மசேன(வயது 76) கருத்து தெரிவிக்கையில்,
“கலாச்சார மத்திய நிலையக் கட்டிடம் அமையப் பெற்றுள்ள இக்காணி ஆரம்பத்தில் பாதுகாப்பான மேட்டுநிலமாகவே இருந்தது. பாதை அபிவிருத்திக்காக இயந்திரங்கள் மூலம் இங்கிருந்த கற்பாறைகள் அகற்றப்பட்டது முதல் மண்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன.
இப்போது மண்சரிவு அனர்த்தங்கள் அடிக்கடி நிகழும் இந்த இடத்தில் ஏன் ஒரு பெறுமதியான அரச கட்டிடத்தை அரசு நிர்மாணிக்க முயற்சித்தது? என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
கட்டிடத்தின் முன்பதி அறைகள் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நிலம் தொடர்ந்தும் கீழிறங்க ஆரம்பித்துள்ளது. சுவர்கள் அகன்றுள்ளன.கூரைத் தகடுகள் அனைத்தும் காற்றிக்கு பறக்கும் நிலையில் உள்ளன.எப்போது இக்கட்டிடம் இடிந்து விழும் எனத் தெரியாது”, என அவர் தெரிவிக்கிறார்.
கஹவத்தை றஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய குணவங்ச தேரர் மற்றும் நடனக் கலை ஆசிரியை சகுந்தலா உட்பட கஹவத்தை பிரதேச மக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கஹவத்தை பிரதேச செயலாளர் பீ.எஸ்.ஜீ.ருவன்சிறி கேட்ட போது
“அனைவர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ள கஹவத்தை கலாச்சார மத்திய நிலைய கட்டிடம் தொடர்பில் நாம் கூடுதலான அவதானத்துடன் செயற்பட்டு வருகிறோம்.அன்று 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கேள்வி கோரலின் அடிப்படையிலெயே கே.பி.கன்ஸ்ரக்சன் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனினும் பொருத்தமற்ற இடத்தை தெரிவு செய்துள்ளமை தொடர்பிலும், இரத்தினபுரி மாவட்ட கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவுரைகளை மீறி செயற்பட்டுள்ளமை தொடர்பிலும் மற்றும் குறித்த ஒப்பந்த நிறுவனத்திற்கு மேலதிகமாக 1 மில்லியன் பணம் கொடுக்கப்பட்டுள்ளது பற்றியும் அரசு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.விரைவில் இது பற்றிய உண்மைகள் அனைத்தும் வெளிக்கொண்டுவரப்படும்.
அத்துடன் கஹவத்தை கலாச்சார மத்திய நிலையக் கட்டிடமும் பொருத்தமான இடத்தில் நிர்மாணிக்கப்படும்”,என அவர் உறுதியளிக்கிறார்.
மேற்படி கலாச்சார நிலையக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் விவகாரம் தொடர்பில் 1 மில்லியன் ரூபாவை மேலதிகமாகப் பெற்றுள்ளார் என குற்றச்சாட்டப்பட்டு வரும் கே.பி. கன்ஸ்ரக்சன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரிடம் இது பற்றி விளக்கம் கேட்ட போது
“கஹவத்தை கலாச்சார நிலைய நிர்மாணப் பணிகள் அனைத்தும் டென்டர் ஒப்பந்தத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன.ஆறு மாதங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் நிலவிய கருத்து முரண்பாடுகளினால் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க எமது சேவைகளை வழங்குவதற்கு நாம் உரிய ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தோம்.எனினும் முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா மாத்திரமே எமக்கு கட்டணமாக அவர்கள் செலுத்தினர்.
பின்னர் மீதி 1 மில்லியன் ரூபாவையும் தருமாறு நாம் கோரியிருந்தோம். அதற்கிணங்கவே அப்பணம் கிடைக்கப்பெற்றது. நாம் இப்பணத்தை சட்ட ரீதியாகவே பெற்றுள்ளோம்.ஆனாலும் இப்பணம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.கஹவத்தை பிரதேச செயலக அதிகாரிகள் மேற்கொண்ட தவறுகளுக்கு நாம் என்றும் பொறுப்புக்கூற மாட்டோம்”, என அவர் தெரிவிக்கிறார்.
இரத்தினபுரி மாவட்ட கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவுரைகளை மீறி கஹவத்தை பிரதேச செயலகம் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தமை தொடர்பில் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அபித வணசுந்தரவிடம் கேட்டோம்.இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்
“கஹவத்தை கலாச்சார மத்திய நிலைய நிர்மாணிப்பு தொடர்பில் 2011.07.25 ஆம் திகதி முதல் இன்றுவரை பல கடிதங்களும் அறிக்கைகளும் கஹவத்தை பிரதேச செயலகத்துடன் பரிமாறியுள்ளோம்.
ஆனாலும் எமது அறிவுரைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.நாம் அவர்களுக்கு கட்டளையிட முடியாது. அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் அவர்களுக்கு விளங்கப்படுத்த மாத்திரம்தான் எமக்கு அதிகாரங்கள் உள்ளன.இரத்தினபுரி மாவட்டத்தில் பல இடங்களில் அரச கட்டிடங்கள் எமது அறிவுரைகளை மீறி கட்டப்பட்டு வருகிறது.
பின்னர் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது மீண்டும் எமது உதவியை எதிர்பார்க்கின்றனர்.
மொத்தத்தில் அரச பணம் மாத்திரம்தான் அநியாயமாக்கப் படுகிறது. இந்நிலையை மாற்றியமைப்பதற்கு அனர்த்த பாதுகாப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வரப் பட வேண்டும்”,என அவர் விளக்கம் அளிக்கிறார்.
கஹவத்தை கலாச்சார மத்திய நிலையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு கே.பி.கன்ஸ்ரக்சன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும் சபரகமுவ மாகாணத்தில் அரச கட்டிடங்களை நிர்மாணிக்கும் ஒப்பந்தக்காரர்களை தெரிவுசெய்வதற்காக இடம்பெறும் டென்டர் விவகாரத்தில் பலத்த சந்தேகம் நிலவுவதாக சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இப்லார் எம்.யஹ்யா தெரிவிக்கிறார்.
2009 ஆம் ஆண்டு மேற்படி கே.பி.கன்ஸ்ரக்சன் நிறுவனம் 3.5மில்லியன் ரூபா செலவில் கஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் மதிலை நிர்மாணித்துக் கொடுத்தது.
எனினும் 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவொன்றின் போது மேற்படி மதில் முற்றாக இடிந்து விழுந்து பாடசாலையின் கட்டிடத்திற்கு பாரிய பாதிப்புக்கள் இடம் பெற்றன.இது தொடர்பில் ஆராய்ந்த இரத்தினபுரி கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.
“மதில் நிர்மாணிப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள பிரகாரம் தரமான சீமெந்தி கலவைகளை பயன்படுத்தி இந்த மதில் அமையப்பெறவில்லை.மணல் தேவையை விடவும் மிகக் கூடுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனாலேயே மேற்படி மதில் இலகுவாக இடிந்து விழுந்துள்ளது”,என குறிப்பிட்டுள்ளது.
எனினும் சபரகமுவ மாகாண சபை கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரிவு மேற்படி பாடசாலையின் மதிலை 5.5 மில்லியன் ரூபா செலவில் மீண்டும் புனரமைப்பதற்கு குறித்த கே.பி.கன்ஸ்ரக்சனையே தெரிவு செய்தமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட தகவல் மத்திய நிலை பணிப்பாளர் ஷமின்ந்த பியஸேகர தெரிவிக்கிறார்.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள கஹவத்தை கலாச்சார மத்திய நிலையம் தொடர்பில் சபரகமுவ மாகாண ஆளுநர் மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் உட்பட கஹவத்தை பிரதேச செயலக அதிகாரிகள் அனைவரும் உரிய கவனம் செலுத்துவதுடன் பொருத்தமான இடத்தில் மேற்படி கலாச்சார மத்திய நிலையத்தை நிர்மாணித்துத் தருமாறும் கஹவத்தை பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.