தேசிய சாமாதனப் பேரவையின் ஏற்பாட்டில் மதங்களுக்கிடையிலான தேசிய மட்டத்திலான 2 நாள் செயலமர்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் ஜுன் 4, 5ஆம் திகதிகளில் முழுநாள் நிகழ்வாக இடம்பெற்றது.
முதல் நாள் நிகழ்வில், நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார, சூழ்நிலைகள் குறித்து தேசிய சாமாதான பேரவையின் தலைவரும் எழுத்தாளருமான கலாநிதி ஜெஹான் பெரோரா அவர்கள் கருத்துரை வழங்கினார்.
தற்போதைய சூழலில் சிவில் சமூகத்தின் பணிகள் எனும் தலைப்பில் அவரால் நிகழ்த்தப்பட்ட அவ் உரையில், குறிப்பாக நடாஷா, ஜெரோம் பெர்னாண்டோ விவகாரம், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள நாட்டிற்கு ஒவ்வாத சட்டங்கள், நலிவடைந்து செல்கின்ற பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, தேர்தல் நடத்தப்படாமையினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், தற்போது உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற ஊடகம் தொடர்பான புதிய சட்டம், அது எந்தளவு தூரம் கருத்துச் சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது, ஊழல் மோசடி காரணங்களால் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய விளைவுகள், அதேபோன்று பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரியொருவரை பாராளுமன்றத்தின் ஊடாக நீக்கியிருக்கின்றமையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, போன்றவைவற்றை அவர் விளக்கப்படுத்தி, இத்தகைய விவகாரங்களில் சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஏராளமான சமகால பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.
இதேநேரத்தில் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற NGOக்களைக் கூட கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்கள் உருவாக்கப்படுவதால் வருகின்ற ஆபத்துக்கள் பற்றியும் கலாநிதி ஜெஹான் பெரோரா மேலும் தனது உரையிலேயே குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து அவருடைய விரிவுரை தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பல்வேறு மதத்தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு கருத்துக்களையும் பல்வறு ஆலோசனைகளையும் வழங்கினார்கள். குறிப்பாக ஜெரேம் பெர்னாண்டோ, நடாஷா விவகாரம் இதன்போது முக்கிய பேசுபொருளாக இருந்ததை அவதானிக்க முடிந்தமை கவனிக்கத்தக்கது.
முதல்நாள் நிகழ்வில் அடுத்த அம்சமாக, தலைமைத்துவமும் கூட்டுத் தலைமைத்துவத்தினுடைய பொறுப்பும் என்ற தலைப்பில் ஓர் அழகிய விரிவுரை இடம்பெற்றது.
பல்லின சமூகம் என்ற அடிப்படையிலேயே சர்வ சமயங்களையும் சார்ந்த தலைவர்களும் கூட்டாக செயற்பட்டு இந்த நாட்டு மக்களுக்கு தலைமைத்துவம் வழங்கி நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த உரையை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் கலாநிதி சந்தன ஏக்கநாயக்க மிகச் சிறப்பாக வழங்கினார்.
அவர் தன்னுடைய உரையில், சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் எவ்வாறான தலைமைத்துவ பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும், பிரச்சினைகளை எதிர்நோக்கக் கூடிய வகையில் எவ்வாறான உணர்வுகளையும் பயிற்சிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றியும் சவால்களுக்கு எதிர்கொள்ளக்கூடிய அடிப்படையிலே தலைவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது பற்றியும் அனுபவப் பூர்வமாக தன்னுடைய விளக்கத்தை வழங்கினார்.
குறிப்பாக 27000 சிறைக் கைதிகளையும் 14000 போதைப்பொருள் குற்றவாளிகளையும் கொண்டிருக்கின்ற இலங்கையினுடைய சிறைச்சாலைகளின் மேலதிக ஆணையாளர் அவர்கள், சிறைச்சாலை உயர் அதிகாரி என்ற வகையில் தனது நீண்டகால அனுபவங்களை அடிப்படையாக வைத்து, எவ்வாறு சிறைச்சாலைகள் மட்டத்தில் கைதிகளை புனர்வாழ்வளிக்கின்றார்கள், அவர்கள் எவ்வாறு நல்ல திசைக்கு திரும்புகின்றார்கள், எவ்வாறு அவர்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்புச் செய்வோராக மாறுகின்றார்கள் என்பவற்றை மிக அழகாகக் தொட்டுக்காட்டியமை இந்த உரையின் சிறப்பம்சமாகும்.
இதன் மூலம் சமூகப் பணிகளில் ஈடுபடுகின்ற சிவில் தலைமைகள், சமயத் தலைவர்கள் எவ்வாறானதொரு சூழ்நிலையிலும் சலிப்படைந்துவிடாமல் சோர்வடைந்துவிடாமல் நாட்டினுடைய மக்கள் பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என்பதற்கான மிகச்சிறந்த நடைமுறை உதாரணத்தை காட்டுகின்ற உரையாகவும் இது அமைந்திருந்தது.
இந்த உரையை தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கேள்வி பதில்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இரண்டாம் நாள் அமர்வு, காலையில் ஆரம்பமாகியது. முதல்நாள் அமர்வில் நிகழ்த்தப்பட்ட இரண்டு உரைகள் தொடர்பாக கலந்து கொண்டோர்களிடத்திலிருந்து மேலதிகமான கருத்துக்களும் விளக்கங்களும் கோரப்பட்டு பதில்கள் வழங்கப்பட்டதையடுத்து தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளராக இருக்கின்ற சமன் செனவிரத்ன அவர்கள் இரண்டாம் நாள் நிகழ்வை நடத்தினார்.
குழுக் கலந்துரையாடலாக இடம்பெற்ற இந் நிகழ்வு, 3 முக்கியமான தலைப்புக்களில் அமைந்திருந்தன.
இந்த நாட்டிலே மத சுதந்திரத்திற்கு இருக்கின்ற வாய்ப்புக்களும் அதனை பின்பற்றுதலில் இருக்கின்ற தடைகள் என்ற ஒரு தலைப்பிலும், சிங்களம், தமிழ், முஸ்லிம் இனங்களைச சார்ந்த ஒவ்வொருவரும் தமக்கிடையே சமாதானத்தோடும் ஐக்கியத்தோடும் வாழ்வதற்கு நாட்டில் இருக்கின்ற வாய்ப்புக்களும் அதனை பின்பற்றுதலில் இருக்கின்ற தடைகள் என்ற மற்றொரு தலைப்பிலும், நாளாந்த வாழ்க்கைக்கு இலங்கையில் இருக்கின்ற வாய்ப்புக்களும் தடைகளும் என்ற மூன்றாவது தலைப்பிலும் இக்கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மதத்தலைவர்களும் ஏனைய சமூக ஆர்வலர்களும் மிக ஆர்வத்தோடு கலந்துகொண்டு தங்களுடைய பெறுமதி வாய்ந்த கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மதத்தலைவர்கள் சார்பாகவும் சிவில் சமூகம் சார்பாகவும் இரு வகையான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இதில், தற்போது விவாதத்துக்குள்ளாகியுள்ள பயங்கரவாத தடைச்சட்டம், ஊடக ஒடுக்குமுறைச் சட்டம் அதேபோன்று ஜெரோம், நடாஷா விவகாரம் ஆகியன இந்த ஊடக சந்திப்பில் பிரதான கருப்பொருளாக அமைந்திருந்தன.
மாதம்பாகம அஸ்ஸஜி தேரர் அவர்கள், இவ் ஊடக கலந்துரையாடல்களை தலைமைத்தாங்கி நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றிகளைக் கூறி இந்த இரண்டு நாள் அமர்வுகளை முடிவுக்கு கொண்டுவந்தார்.
இந்த இறுதி நிகழ்வில், கடந்த 23 ஆண்டுகளாக தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளராகவும் வெவ்வேறு பொறுப்புக்களையும் வகித்து செயற்பட்டு வந்த சமன் செனவிரத்ன அவர்கள் தான் இந்த பொறுப்பிலிருந்து இம் மாத்திலிருந்து நீங்குவதைக் குறிப்பிட்டு தேசிய சமாதான பேரவையின் அங்கத்தவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தார்.
இது குறித்து தமது ஆழ்ந்த கவலையையும் கருத்துக்களையும் கலந்துகொண்டிருந்த மதத்தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் தெரிவித்ததோடு சமன் செனவிரத்னவினுடைய 23 ஆண்டு கால தன்னலம் பாராத சேவைகள் பண்புகள் குறித்தும் சிலாகித்து பேசினார்கள்.
இந்த இரு நாள் அமர்வும் பல்வேறு வகையில் நன்மைகளைக் கொண்டு வந்த ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது.
இதில் கலந்துகொண்டவர்கள் பலரும் தெரிவித்ததைப்போல, எல்லோருக்குமிடையில் அந்நியோன்னிய தன்மையை பலப்படுத்தக்கூடிய நிகழ்வாகவும் பல்வேறு மதங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தெளிவு பெறக்கூடிய வகையிலும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படக்கூடிய வகையில் வழிகாட்டல்களை பெற்றுக்கொண்ட ஒரு களமாகவும் இந்த செயலமர்வு அமைந்திருந்தது.
அந்த வகையில் இவ்வாறான சந்திப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறவேண்டும் என்ற பேராவலோடு வருகைத்தந்த அனைவரும் கலைந்து சென்றனர்.