யூடியூப் சேனல்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்: சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கும் ஆபத்து!

Date:

அண்மைக் காலமாக பிரபல யூடியூபர்களை குறிவைத்து ஹேக்கர்கள் விசித்திர தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் யூடியூபர்கள் அரும்பாடுபட்டு கட்டமைத்த அவர்களது சேனல் நிர்மூலம் ஆவதோடு, அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கும் சாமானிய பார்வையாளர்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறது.

வங்கி இருப்பை குறிவைத்த ஹேக்கர்களின் ஆரம்ப தாக்குதல் தற்போது பல்வேறு திசைகளையும் வியாபித்திருக்கிறது.

கொரோனா காலத்தில் மிகப்பெரும் நிறுவனங்களின் சர்வர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கணினி ஆகியவற்றை ஹேக்கர்கள் குறிவைத்தார்கள்.

அவ்வாறு ஹேக் செய்யப்படும் கணினியை மீளப்பெற, சம்பந்தப்பட்டவர்கள் ஹேக்கர்களுக்கு க்ரிப்டோ கரன்சியில் பெருந்தொகை அழ வேண்டியிருக்கும். இந்த ரான்சம்வேர் தாக்குதல்கள் தற்போது பிரபல யூடியூபர்களையும் குறி வைத்துள்ளன.

பிரபல யூடியூப் சேனல்களை ஹேக்கர்கள் குறிவைப்பதன் நோக்கம் இரு வகையில் அமைகிறது. முதலாவது குறி வைப்பு, யூடியூப் பிரபலத்துக்கு. சேனலை கைப்பற்றும் ஹேக்கர்கள் வழக்கமான ரான்சம்வேர் பேரங்களை முன்வைப்பார்கள்.

யூடியூபர்களை பணியச் செய்ய, சேனலின் வீடியோக்களை அழித்து, சப்ஸ்கிரைபர்களை தெறித்தோடச் செய்யும் வகையிலான வீடியோக்களை பதிவேற்றி மிரட்டுவார்கள்.

யூடியூபில் ஏராளமாய் சம்பாதிக்கும் பிரபலங்களை மட்டுமே ஹேக்கர்கள் குறிவைப்பதால், இந்த ரான்சம்வேர் பேரங்கள் எளிதில் படிந்துவிடுகின்றன.

சேனலை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த கணமே, கமெண்ட் பகுதியை வெகுவாய் அல்லது முழுவதுமாய் கட்டுப்படுத்துவார்கள்.

அதில் முக்கியமாக சேனலை பறிகொடுத்த யூடியூபர், தனது சப்ஸ்கிரைபர்களை எச்சரிக்க வழியின்றி முடக்குவார்கள்.

முதல் குறி வைப்பு யூடியூபருக்கு எனில், இரண்டாவது குறி பிரபலத்தின் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கும் அப்பாவி பார்வையாளர்களுக்கு.

சேனல் ஹேக் செய்யப்பட்ட விவரம் சப்ஸ்கிரைபர்களை அண்டும் முன்னர் தங்களது வித்தைகளை களமிறக்குவார்கள். யூடியூப் பிரபலத்தின் வழக்கமான வீடியோ பாணியில், பிளேலிஸ்டில் இருக்கும் பிரபல வீடியோவை மீண்டும் வலையேற்றுவார்கள். கூடவே டிஸ்க்ரிப்ஷனில் இருக்கும் இணைப்பை சொடுக்குமாறு சப்ஸ்கிரைபர்களை தூண்டுவார்கள்.

அப்படியான இணைப்புகளை சப்ஸ்கிரைபர் சொடுக்கினால் போச்சு. மால்வேர் வேகமாக சப்ஸ்கிரைபரின் கணினியில் இறங்கி புதிய ஆட்டத்தை ஆரம்பிக்கும்.

இப்படி உலகம் முழுக்க ஏராளமான யூடியூப் பிரபலங்கள் தங்கள் சேனலை ஹேக்கர்களிடம் பறிகொடுத்து, பின்னர் பெருந்தொகையை பணயமாக அழுது சேனலை மீட்டிருக்கிறார்கள். மேலும், சேனலை சப்ஸ்கிரைப் செய்தவர்களும் மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகி தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெரியளவிலான இணைய மோசடிகள் அதிகரித்த கொரோனா காலத்தில்தான் இந்த யூடியூப் ஹேக்கர்களும் தங்களது தேட்டையை ஆரம்பித்தனர்.

யூடியூபர்கள் குறிவைக்கப்படுவதை அறிந்ததும், கூகுள் நிறுவனம் யூடியூப் சேனல்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை இறுக்கியது. பல்லடுக்கு பாதுகாப்பு, பல வகையிலான அடையாளம் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டது.

ஆனால் குக்கிகள் வழியாக குறிவைக்கும் ஹேக்கர்களின் நோக்கத்துக்கு, யூடியூப் பிரபலங்கள் எளிதில் இரையாகிறார்கள். எனவே, ஹேக்கர்ஸ் தாக்குதலை உத்தேசித்து, தாங்கள் பரிந்துரைக்கும் பல்லடுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஓடிபி சரிபார்ப்புகளை முறையாக பின்பற்றுமாறு கூகுள் அறிவுறுத்துகிறது. ஆனால், யூடியூபர்களின் அலட்சியம் அவர்களது முதலுக்கு மோசம் செய்கிறது.

ஹேக்கர்களின் தாக்குதல் அதிகரித்ததில், முறைகேடாக அழிக்கப்படும் வீடியோக்களை பிற்பாடு மீட்கும் வசதியை கூகுள் செயல்படுத்தியது. ஆனபோதும் ஹேக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

எனவே யூடியூபர் அல்லது சப்ஸ்கிரைபர் என யூடியூபில் சதா சஞ்சரிப்போர் எவராயினும், கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

யூடியூபர்கள் தங்களுக்கு வருமான வாய்ப்பு மற்றும் விளம்பரதாரர் பெயரிலான மெயில்களை கவனமாக கையாள்வதுடன், இணைப்புகளை எச்சரிக்கையுடன் திறப்பது நல்லது. அதே போன்று, சப்ஸ்க்ரைபர்ஸ் வீடியோவின் கீழிருக்கும் இணைப்புகளை சொடுக்குவதில் ஏக எச்சரிக்கை தேவை.

மூலம் : இணையம்

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...