நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்துகொண்டு அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பானதென்பது தெளிவாகியுள்ளது.
எனவே, நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த பெருமையுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கிகொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தியிருந்தேன். கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டில் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்திருந்த நிலையில், இறுதியில் ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் அந்தச் சந்திப்பை புறக்கணித்திருந்தன.
நானும், ஆர்.சம்பந்தனும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அந்த சந்திப்பில் கலந்துகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம்.
எனவே மே 9 நிகழ்வின் பின்னர் நாம் அனைவரையும் ஒன்றிணைக்க முற்பட்டோம். பிரதமர் பதவியைப் பொறுப்பேற்காவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி எங்களுடைய வேலைத்திட்டங்களுடன் இணைந்துகொள்ளும் என எதிர்பார்த்த போதும் அது நடக்கவில்லை.
அதன் பின்பே தற்போதைய ஆளும் தரப்பை கட்டமைத்து எமது பணிகளை ஆரம்பித்தோம். தற்போது நாம் விவசாயத்தை முன்னேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற அதேநேரம், ஏற்றுமதியை மையப்படுத்திய விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும். இதுவரையில் நாம் நமக்கு அவசியமான உணவு உற்பத்தியினை மாத்திரமே மேற்கொண்டிருந்தோம்.
எதிர்வரும் நாட்களில் உலகத்தின் உணவுத் தேவைக்கு அவசியமான உற்பத்திகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் என்ற பாரிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதேபோல் கால்நடை வளங்களை மேம்படுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவதாக ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது கைவைக்க வேண்டாம் என்கிறார்கள். நாம் அதன் மீது கைவைக்கவில்லை. மேலும் நான் ஜனாதிபதியாவதற்கு முன்பாகவே அதற்கான வட்டி வீதம் 10 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைவடைந்திருந்தது. அதற்கு எவ்வித எதிர்ப்பையும் எதிர்கட்சி வெளிப்படுத்தி இருக்கவில்லை.
எனவே தொடர்ச்சியாக போலியான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு மாறாக அரசாங்கத்தினால் நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் இணைந்துக் கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான முழு எதிர்க்கட்சிக்கும் அழைப்பு விடுக்கிறேன். அவ்வாறு ஒன்றுபடும் பட்சத்தில் நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த பெருமிதத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.