தோரா (தௌராத்), பைபிள் (இன்ஜீல்) வேதநூல்களை எரிக்கும் போராட்டம் கைவிடப்பட்டது.
சுவீடனில் கடந்த மாதம் துருக்கிய தூதரகம் முன்பாக புனித குர்ஆன் பிரதியொன்று எரிக்கப்பட்ட சம்பவம் இஸ்லாமிய உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
ஆயினும் கருத்துச் சுதந்திரத்தின் பேரில் சுவீடன், ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதனை நியாயப்படுத்தி இருந்தன.
இதற்குப் பதிலடியாக அஹமத் அல்லுஷ் என்ற முஸ்லிம் இளைஞர், தோரா (தௌராத் வேதம்), பைபிள் (இன்ஜீல் வேதம்) என்பவற்றை தீயிட்டு எரிப்பதற்கான அனுமதியொன்றை அதே கருத்துச் சுதந்திரத்தின் பேரில் பெற்றுக் கொண்டிருந்தார்.
இது முன்னைய சம்பவத்தைப் பார்க்கிலும் பாரியளவில் ஐரோப்பிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
கருத்துச் சுதந்திரத்தின் பேரில் குர்ஆன் எரிப்பை நியாயப்படுத்தியவர்கள் இதனைக் கண்டிக்க வழியின்றி வாயடைத்துப் போய் வேறு வார்த்தைகளில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்யத் தலைப்பட்டார்கள்.
இந்நிலையில் நேற்றையதினம் இஸ்ரேலிய தூதரகம் முன்பாக புனித குர்ஆன் ஒன்றைச் சுமந்தபடி வருகை தந்த அஹ்மத், உலகின் கவனத்தை ஈர்க்கவே தான் தோரா மற்றும் பைபிள் வேத நூல்களை எரிக்கப் போவதாக அறிவித்ததாகவும், ஒரு முஸ்லிம் என்ற வகையில் எந்தவொரு வேத நூலையும் எரிக்கும் அனுமதி மார்க்க ரீதியில் தனக்கு கிடையாது என்றும், இஸ்லாம் என்பது சகல மதங்களையும் சமமாக மதிக்கும் ஒரு மார்க்கம் என்றும் மிக அழகான முறையில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான தௌிவுபடுத்தல் ஒன்றை வழங்கியிருந்தார்.