சந்திரயான் 3 விண்கலத்தைத் தாங்கிச் செல்லும் எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் சரியாக பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது.
25½ மணி நேர கவுண்ட் டவுன் நாளை பிற்பகலில் முடிந்ததும் சந்திரயான் 3 விணகலத்தின் நிலவுப் பயணம் தொடங்கிவிடும்.
முக்கியத்துவம் வாய்ந்த இஸ்ரோவின் இத்திட்டம் சந்திரயான் 2 திட்டத்தில் இருந்து சில முக்கிய அம்சங்களில் மாறுபட்டதாக இருக்கிறது.
எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட்டில் விண்கலத்தின் எல்லா பகுதிகளும் முழுமையாக பொருத்தப்பட்டு, அனைத்து பரிசோதனைகளும் சோதனை ஓட்டமும் முடிக்கப்பட்டன. திட மறுறம் திரவ எரிபொருள் நிரப்புதல், பேட்டரி சார்ஜ் செய்தல் போன்ற கவுண்டவுன் நேரத்தில் கடைசி கட்ட பணிகள் நடைபெறும்.
எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் ‘புரபுல்சன்’ என்ற முக்கியப் பகுதியைக் கொண்டிருக்கிறது. இது விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதிகளை நிலவில் 100 கி.மீ. தொலைவு வரை கொண்டு செல்லக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லேண்டர் பகுதி தான் நிலவில் விண்கலம் மெதுவாக தரையிறங்கும் பகுதி. ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் பகுதி. இந்த முக்கிய பகுதிகளுக்கு இடையே ரேடியோ அலைவரிசை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.