-Dr. M H M Azhar
ஆல் ஸுஊத் குடும்பத்தினர் அந்நாட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து அவர்களே ஹஜ் கடமையுடன் தொடர்பு பட்ட விடயங்களை ஒழுங்குபடுத்தி, அதை மேற்பார்வை செய்து, வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
ஹஜ் உம்ரா போன்ற கடமைகளை ஒழுங்குபடுத்துவதற்கென்று பிரத்தியேகமான ஓர் அமைச்சை ஸ்தாபித்திருப்பது அவ்வரசாங்கம் இக்கடமைகள் மீது காட்டுகின்ற கரிசனையை காட்டுகின்றது.
குறித்த அமைச்சு இவ்விடயத்திலேயே வருடம் பூராகவும் திட்டமிட்டு செயற்படுத்துகின்றது. நடப்பு வருடத்தில் கவனிக்கப்பட்ட குறைகள் அடுத்த வருடத்தில் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு யாத்திரிகர்களின் விடயத்தில் கவனம் செலுத்தப்படுகின்றது.
அந்த அடிப்படையில் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 150 க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து 16,60,915 முஸ்லிம்கள் மக்காவிற்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வருகை தந்துள்ளனர்.
இவ்வெண்ணிக்கைக்குள் உள்நாட்டு யாத்திரிகர்களோ, யாத்திரிகர்களுக்கு சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மனித வளங்களோ உள்ளடங்க மாட்டார்கள், இவ்வருடம் 1,84,130 உள்நாட்டு யாத்திரையர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டு ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.
அந்த அடிப்படையில் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றிய மொத்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை: 18,45,045 ஆகும் என ஹஜ் விவகார அமைச்சர் தெளபீக் பவ்ஸான் ரபீஆ அவர்கள் அரஃபா தினத்தில் (26/05/2023) நடாத்திய ஓர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர்களுள் இலங்கையிலிருந்து சென்ற: 3660 ஹாஜிகளும் உள்ளடங்குவார்கள்.
இம் 3660 பேரில் 3500 பேர் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஹஜ் கோட்டா அடிப்படையிலும், இன்னும் 150 பேர் பிஃஸா சலுகை அடிப்படையிலும், இன்னும் 10 பேர் சவுதி மன்னரின் ஹஜ்ஜுக்கான இவ்வருட விருந்தாளிகள் என்ற அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் மினாவில் கூடாரம் மற்றும் உணவுடன் தொடர்பட்ட சில சிக்கல்களை இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் சிலர் எதிர்கொண்டுள்ளனர், அவற்றை அங்குள்ள இலங்கைக்கான தூதரகக் குழு ஒன்று சவுதி அரேபியாவின் ஹஜ் விவகார கமிட்டியுடன் தொடர்பு கொண்டு தீர்வுகளை பெற்றுக் கொண்டதாக இவ்வருட ஹஜ் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை ஒட்டி இலங்கை சார்பாக வழங்கப்பட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, குறித்த வாழ்த்து அறிக்கை (02/07/2023) அன்று வெளியான அரப் நியூஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
40 பாகைக்கும் அதிகமான வெப்பநிலையை கொண்ட ஒரு காலகட்டத்தில், கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் ஒன்று திரள கூடிய ஓர் இடத்தில் இவ்வாறான ஒரு மார்க்க கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பாகும்.
இவ் வெற்றிக்கு பின்னால் பல தரப்பு முயற்சிகள் பல மாத காலமாக செலவிடப்பட்டிருக்கும் என்பது மிக உறுதியான நம்பிக்கையாகும், அந்த அடிப்படையில் இம்மகத்தான கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த சவூதி அரசாங்கம் சகலவிதத்திலும் நன்றி கூற தகுதியானதாகும்.
ஆகவே ஆரம்பமாக அல்லாஹ்வுக்கும் பிறகு சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கும் மற்றும் அதன் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களுக்கும் மற்றும் ஹஜ்ஜுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளை இவ்வேளையில் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.