தரக்குறைவான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்து சுகாதாரத் துறையை நலிவடையச் செய்தமை மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியமை ஆகிய காரணங்களுக்காக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, “மக்கள் வாக்களிப்பில் பாராளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுங்கள்.
ஒரு நாட்டின் ஆரோக்கியம் என்பது நாட்டு மக்களின் வாழ்க்கை, சுகாதார சீர்கேடு மக்களின் வாழ்க்கை சீரழிவதற்குக் காரணம்”. என தெரிவித்தார்.
அண்மைய காலங்களில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து பயன்படுத்தியதால், நாட்டின் சுகாதார அமைப்பில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்த போதும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது அவசர நிலைமை எனக் கருதி கொள்வனவு மற்றும் பதிவு நடவடிக்கைகளுக்கு புறம்பாக மருந்துகள் கொண்டு வரப்பட்டதன் விளைவாக நாட்டில் உள்ள பல முக்கிய வைத்தியசாலைகளில் உயிரிழப்புகள் பதிவாகின.