நாட்டில் பதிவு செய்யப்படாத 5000க்கும் மேற்பட்ட மத ஸ்தலங்கள் காணப்படுவதாக புத்த சாசன மற்றும் மதம் விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் 12,235 பௌத்த விகாரைகள் காணப்பட்டாலும் 10,323 விகாரைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெளத்த அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பௌத்த விவகார ஆணையாளரின் மேற்பார்வையில் உள்ள இத்திணைக்களத்தின் தரவுகளின்படி, 1,912 பதிவு செய்யப்படாத பௌத்த விகாரைகள் உள்ளன.
இரு பிரிவினரிடையே நிலவி வரும் உரிமை, நில உடைமைப் பிரச்சினை, விகாரைகளின் தலைமைப் பதவிகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் போன்ற சட்டச் சிக்கல்கள் காரணமாக விகாரைகளை பதிவு செய்ய முடியாது என பௌத்த விவகார ஆணையாளர் சஹான் குருப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 7,600 இந்து கோயில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், பதிவு செய்யப்படாத சுமார் 60 கோயில்கள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.அறுவரன் தெரிவித்துள்ளார்.
மேலும், 3,600க்கும் மேற்பட்ட முஸ்லிம் மசூதிகளில் 2,459 மசூதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ. பைசல் தெரிவித்துள்ளார்.
ஜும்மா மஸ்ஜித், தகிய்யா மற்றும் சாவியா மசூதிகள் என பதிவு செய்யப்படாத சுமார் 1,200 பள்ளிவாசல்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2,119 கத்தோலிக்க தேவாலயங்கள் மட்டுமே கிறிஸ்தவ விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்படாத 8,000க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான தேவாலயங்கள் மற்றும் நிலையங்கள் கிறிஸ்தவ மதங்கள் மற்றும் சபைகளால் நடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் சதுரி பிந்து தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அவற்றை ஒழுங்குபடுத்தவும் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.