“கலாச்சார இராஜதந்திரம் – பாகிஸ்தானில் காந்தாரா நாகரிகம் மற்றும் புத்த பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளித்தல்” என்ற தலைப்பில் காந்தாரா மாநாடு எனும் நிகழ்வு, கடந்த 11 ஆம் திகதி முதல் 13 வரை மூன்று நாட்கள் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் நடத்தப்பட்டது.
காந்தாரா சுற்றுலா தொடர்பான பிரதமர் பணிக்குழு, இஸ்லாமாபாத் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் (ISS) மற்றும் கைபர் பக்துன்க்வா அரசாங்கத்தின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்களின் தலைமைத்துவ குழுவினால் இந்நிகழ்வு இடம்பெற்றது.
முதல் நாளான 11 ஆம் திகதி நடைபெற்ற தொடக்க அமர்வில், பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் அல்வி, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதோடு கந்தாரா சுற்றுலா தொடர்பான பிரதமரின் பணிக்குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான டாக்டர் ரமேஷ் குமார் வான்க்வானி கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன் போது உரையாற்றிய பாகிஸ்தான் ஜனாதிபதி இந்த முயற்சியைப் பாராட்டியதுடன், பாகிஸ்தானின் கலாச்சார பாரம்பரியத்தில் காந்தாரா நாகரிகத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
நாகரிகங்களுக்கிடையில் உரையாடலை ஊக்குவிக்கவும் உலகளாவிய நட்புறவை வலுப்படுத்தவும் கலாச்சார இராஜதந்திரம் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டாக்டர் ரமேஷ் குமார் வான்க்வானி, காந்தாரா நாகரிகத்தின் மறுமலர்ச்சி மற்றும் பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு காந்தாரா சுற்றுலாதுறையானது பாகிஸ்தானுக்கு ஐந்து மில்லியன் மக்களை ஈர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், அதன் முதல் ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயையும் ஆண்டுக்கு 3 முதல் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஈட்டும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காந்தாரா மாநாட்டின் முதலாவது அமர்வு ‘அமைதிக்கான வழிகள்: பாகிஸ்தானின் வளமான புத்த மரபுகளை ஆராய்தல்’ என்ற தலைப்பில் மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, நேபாளம், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மத அறிஞர்கள் மூலம் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மத அறிஞர்கள் பாகிஸ்தானில் காந்தார பாரம்பரியத்தினை பாதுகாக்க பரிந்துரைத்தனர்.
இரண்டாம் அமர்வில் பாகிஸ்தானின் புத்த பாரம்பரியத்தைப் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு, நாகரிகத்தின் மையமாக அதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
மத அறிஞர்கள் பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
உலகளவில் காந்தாரா பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பாகிஸ்தானுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
பௌத்தர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதும் தவறான எண்ணங்களை அகற்றுவதும் உலகம் முழுவதிலுமிருந்து யாத்திரீகர்களை ஈர்ப்பதில் முக்கியமானவை என்றும் கலந்துரையாடப்பட்டது.
காந்தாரா மாநாட்டின் மூன்றாவது அமர்வில் பாகிஸ்தானில் சுற்றுலாவை மேம்படுத்துவது, விசா விதிமுறைகள், திரைப்படம், ஊடகம், விருந்தோம்பல், சமையல், அருங்காட்சியகங்கள், சுற்றுப்பயணங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் அவசியத்தை நிபுணர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
இறுதியாக, காந்தாரா நாகரிகத்தில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, காந்தாரா சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க பாகிஸ்தானின் தயார் நிலை சம்பந்தமாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
பாதுகாப்பு கட்டமைப்பு, விழிப்புணர்வு, பாதுகாப்பு தொடர்பான நிதி, மேற்பார்வை செய்யப்படாத ஹோட்டல்கள், புனரமைக்கப்படாத வீதிகள், சுற்றுலாப் பாதுகாப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஆகிய சவால்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பாகிஸ்தான் ஜனாதிபதியின் உரையுடன் முதலாவது நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து இராப்போசன நிகழ்வு இடம்பெற்றது.