பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரியம்: இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற மூன்று நாள் காந்தாரா மாநாடு-2023!

Date:

 “கலாச்சார இராஜதந்திரம் – பாகிஸ்தானில் காந்தாரா நாகரிகம் மற்றும் புத்த பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளித்தல்” என்ற தலைப்பில் காந்தாரா மாநாடு எனும் நிகழ்வு, கடந்த 11 ஆம் திகதி முதல் 13 வரை மூன்று நாட்கள் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி, காந்தார நாகரிகத்தின் வளமான வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும், பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரியத்தைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

காந்தாரா சுற்றுலா தொடர்பான பிரதமர் பணிக்குழு, இஸ்லாமாபாத் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் (ISS) மற்றும் கைபர் பக்துன்க்வா அரசாங்கத்தின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்களின் தலைமைத்துவ குழுவினால் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கில் இலங்கை, நேபாளம், தாய்லாந்து, சீனா, தென்கொரியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் காந்தாரத்தின் வரலாற்று மரபு மற்றும் அப்பகுதியில் பௌத்தத்தின் செழிப்பான சகாப்தம் பற்றிய தங்கள் எண்ணங்களையும் பார்வைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

முதல் நாளான 11 ஆம் திகதி நடைபெற்ற தொடக்க அமர்வில், பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் அல்வி, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதோடு கந்தாரா சுற்றுலா தொடர்பான பிரதமரின் பணிக்குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான டாக்டர் ரமேஷ் குமார் வான்க்வானி கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

இதன் போது உரையாற்றிய பாகிஸ்தான் ஜனாதிபதி இந்த முயற்சியைப் பாராட்டியதுடன், பாகிஸ்தானின் கலாச்சார பாரம்பரியத்தில் காந்தாரா நாகரிகத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

நாகரிகங்களுக்கிடையில் உரையாடலை ஊக்குவிக்கவும் உலகளாவிய நட்புறவை வலுப்படுத்தவும் கலாச்சார இராஜதந்திரம் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் ரமேஷ் குமார் வான்க்வானி கூறுகையில், காந்தாரா நாகரிகத்தின் மறுமலர்ச்சி மற்றும் பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு காந்தாரா சுற்றுலாதுறையானது பாகிஸ்தானுக்கு ஐந்து மில்லியன் மக்களை ஈர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், அதன் முதல் ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயையும் ஆண்டுக்கு 3 முதல் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஈட்டும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பாகிஸ்தானின் காந்தார பாரம்பரியத்தை மேம்படுத்துவது அவரது தனிப்பட்ட கனவு என்றும்,சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களின் கூட்டு ஆதரவு தேவை என்றும் வான்க்வானி வலியுறுத்தினார்.

கலாசார மென் சக்தியை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன் மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக சுற்றுலாவிற்கு அபரிமிதமான ஆற்றலைக் கொண்ட வரலாற்று தளங்களை எடுத்துரைத்தார்.

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து நாடு திரும்பிய வணக்கத்திற்குரிய கலாநிதி கலஞ்சியே ரத்தனசிறி தேரர், இலங்கை அபயகிரி ஆலயத்தின் பிரதம பிக்கு வணக்கத்திற்குரிய வெலிவிட்டியே சுஜீவ தேரர் மற்றும் புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின்  நிஷாந்த புஷ்பகுமார ஆகியோர் பாகிஸ்தானின் முயற்சிகளையும்  காந்தார நாகரிகத்தைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் அரசின் அர்ப்பணிப்பையும் அவர்கள் பாராட்டினர்.

பாகிஸ்தானின் கலாச்சார மற்றும் மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் இந்த கருத்தரங்கம் குறிப்பிடத்தக்க முன்னோடியாக அமைந்தது, மேலும் சர்வதேச அங்கீகாரம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆகியவை சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று நம்பப்படுகிறது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...