நடைபெறவிருக்கும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் நடுவராக முதல் முறையாக பலஸ்தீனைச் சேர்ந்த ஹெபா சாதியா என்ற பெண்ணை உலகக் கால்பந்து சம்மேளனமான பிஃபா தேர்வு செய்துள்ளது.
இவர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை சுற்றுத் தொடரில் நடுவராக பங்கேற்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் ஒன்பதாவது மகளிர் உலகக் கோப்பை சுற்றுப் போட்டிகள், இரு நாடுகள் இணைந்து நடத்தும் முதல் போட்டி என்பதோடு 32 நாடுகள் பங்கு கொள்ளும் முதல் போட்டியுமாகும்.
34 வயதான ஹெபா சாதியா பலஸ்தீனத்தில் பிறந்தவர். இவர் முன்னாள் பலஸ்தீனிய கால்பந்து வீரராக இருந்து நடுவராக மாறியவர்.
அவர் 26 வயதில் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு குடிபெயர்ந்தார். ஐரோப்பாவில் உரிமம் பெற்ற பிபா நடுவராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
இஸ்ரேலியப் படைகள் பலஸ்தீனத்தில் விளையாட்டு வசதிகளுக்கு பாதிப்பை பல ஆண்டுகளாகவே ஏற்படுத்தி வந்திருக்கும் நிலையிலேயே சாதியா சாதித்திருக்கிறார்.
உள்ளூர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடுவதற்கும் காசாவில் இருந்து கால்பந்து வீரர்கள் இஸ்ரேல் வழியாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்குள் நுழைவதற்கும் இஸ்ரேல் பயண அனுமதிகளை மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.