அமிர்த கால இந்தியாவில் தலித், ஆதிவாசி, முஸ்லிம்கள் அனுபவிக்கும் அநீதிகள்! -கே.எஸ். அப்துல் ரஹ்மான்

Date:

கே.எஸ். அப்துல் ரஹ்மான்
மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி

அண்மைக்காலமாக இந்தியாவில் தீண்டாமைக் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இப்படியெல்லாம் சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளனவா என்ற கேள்வியை பல்வேறு விஷயங்களை சார்ந்து எழுப்புகிறது.  இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்பும் தலித்  ஆதிவாசி சமூகங்கள் அனுபவித்து வரும் அநீதிகள் அதிகரித்தே செல்கின்றன. அந்தவகையில்  தமிழகத்தில் வெளிவரும் சமரசம் என்ற சஞ்சிகையில் வெளியான ஆக்கத்தை வாசகர்களுக்கு தருகின்றோம்.

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி மத்திய அரசு அம்ருத்தோற்சவம் (அமிர்த கொண்டாட்டம்) என்ற பெயரில் விழாக்களை நடத்தியது.

அந்த அம்ருத்தோற்சவ இந்தியாவில் தான் ஆதிவாசியின் மீது சிறுநீர் அபிஷேகம் செய்துள்ளான் சங்பரிவாரைச் சார்ந்த பிரவேஸ் சுக்லா.

சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலம் சித்தியில் நடை பெற்ற இச்சம்பவம் சில தினங்களுக்கு முன் காணொளியாக வெளிவந்தது.

அந்த காணொளி நமக்கு வருத்தத்தை அளித்தாலும் வியப்பளிக்கவில்லை.

இந்தியாவில் அமிர்த காலத்தை உருவாக்குவோம் என வாய்ச்சவடால் அடிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவனான பிரவேஸ் சுக்லாதான் இந்தக் குரூரச் செயலைச் செய்துள்ளான் என்பதிலும் வியப்பொன்றுமில்லை.

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்பும் தலித், ஆதிவாசி சமூகங்கள் அனுபவித்து வரும் அநீதிகளின் ஓர் அடையாளச் சித்திரம் மட்டுமே அந்த காணொளி.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான சட்டமன்ற உறுப்பினர் கேதார்நாத் சுக்லாவின் வலது கையான பிரவேஸ் சுக்லாவைக் கைது செய்தும் வீட்டின் ஒரு பகுதியை இடித்தும் தப்பிக்க நினைக்கிறது மத்தியப் பிரதேச அரசு பாரதிய ஜனதா கட்சியும்.

அந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒன்று. தலித் – ஆதிவாசி தனி நபர்களைச் சொல்லால் இழிவுபடுத்தினால் கூட அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் நமது நாட்டில் உள்ள சட்டம்.

ஆனால் ஆதிவாசியின் மீது சிறுநீர் கழித்த நிகழ்வு நடந்து பல மாதங்கள் ஆன பிறகும் எவ்வித நடவடிக்கையையும் மத்தியப் பிரதேச பாஜக அரசு எடுக்கவில்லை. இப்போது அவ் வீடியோ வைரல் ஆனதில் நாடு முழுவதும் அது கோப அலைகளை உண்டாக்கியுள்ளது. அதன் பிறகு தான் பிரவேஸ் சுக்லா கைது செய்யப்பட்டுள்ளான்.

இதற்குப் பிறகும் கூட கைது செய்ய வில்லை என்றால் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெட்க உணர்வும் போய் விட்டது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இதில் பெருமையடிக்க எந்த முகாந்திரமும் இல்லை.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உள்ள கோல் என்ற பழங்குடியின கோத்திரத்தைச் சார்ந்தவர்தான் பாதிப்புக்கு ஆளான இளைஞர்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இப்பிரச்சினை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் இதை எதிர்க்கட்சிகள் ஓர் ஆயுதமாக உபயோகிக்கும் என்பதாலும் பாரதிய ஜனதா கட்சிக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.

அது ஒரு புறம் இருக்க, தேசிய குற்றவியல் ஆவணங்களின்படி இந்தியாவிலேயே தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் எதிராகக் குற்றங்கள் நடக்கும் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது மத்தியப் பிரதேசம் என்பதும் கவனிக்கத்தக்கது. அங்கு 2021ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற குற்றங்கள். (இவை பதிவானவை மட்டுமே)
* தலித்களுக்கு எதிரான குற்றங்கள்: 7,214
* பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள்: 2,௬௨௭
பிரவேஸ் சுக்லாவைக் கைது செய்வதாலோ அவனது வீட்டின் ஒரு பகுதியை இடிப்பதாலோ அநீதிக்கு ஆளான ஆதிவாசி இளைஞனின் கால்களைக் கழுவுவதானாலோ இவை மாறப்போவதில்லை.

முஸ்லிம், கிறித்துவ சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக மட்டுமல்ல தலித், ஆதிவாசிகளுக்கு எதிராகவும் நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

பள்ளியில் உள்ள தண்ணீர் பாத்திரத்திலிருந்து நீர் எடுத்துக் குடித்தான் என்பதற்காகத் தலித் சிறுவனை அடித்துக் கொன்ற ஆசிரியர், பாபா சாகிப் அம்பேத்கரின் புகழ் பாடும் பாடலைத் தனது அலைப் பேசியில் ரிங்டோனாக வைத்தது.

தலித் இளைஞன் திருமண வேளையில் குதிரையில் சவாரி செய்தது, ஆதிக்கச் சாதி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தது போன்ற நிகழ்வுகள் எல்லாம் சாதி வெறியர்களை ஆத்திரமூட்டியது. அவர்கள் அனைவரும் சாதி வெறியர்களால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

அரியானா மாநிலம் கர்நாலில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஓர் ஆதிக்கச் சாதி வீட்டில் கால்நடைகளைப் பராமரிக்கும் பணியைச் செய்து வந்தார் பிரேம்சந்த் என்ற 50 வயது முதியவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஏன்? எதனால்? வேறொன்றுமில்லை. அவர் காலில் செருப்பு அணிந்து கொண்டு வீட்டில் நடந்தார் என்ற ஒற்றைக் காரணம் மட்டுமே.

கடுமையாகத் தாக்கப்பட்டு குற்றுயிராகக் கிடந்த நிலையில் மருத்துவமனைக்கு வாகனத்தில் கொண்டு செல்லக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை என அவரது மகன் புலம்புகிறார்.

தலித் இளைஞர்களை அடித்துக் கொல்வதும் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வதும் அன்றாடச் செய்திகளாகிவிட்ட காரணத்தினால் ஊடகங்கள் அவற்றை எதுவும் கண்டு கொள்வதில்லை.

தலித், ஆதிவாசி, முஸ்லிம்கள் மீது நடக்கும் கொடுமைகளைக் கண்டு நாட்டின் பொது மனசாட்சிக்கு எந்தக் கவலையோ வேதனையோ ஏற்படுவதில்லை.

பொதுச் சமூகத்தின் இந்த மௌனமே சங்பரிவார் கும்பல்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கிறது.

சாதி வெறியர்களுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள் மீது ஒன்றிய அரசும் சங்பரிவாரும் எடுக்கும் நடவடிக் கைகளும் அவர்களது தயக்கத்திற்கும் மௌனத்திற்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆதிவாசி சமூகத்தின் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி வந்த பாதிரியார் ஸ்டாண்ட் சுவாமி, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு இறுதியில் பலியானார்.

பீமா கோரகான் கலவர நிகழ்வைக் காரணம் காட்டி பல சமூக செயல்பாட்டாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் வன்கொடுமை செய்யப்பட்டு குடும்பமே சீரழிக்கப்பட்ட தலித் சிறுமியின் வீட்டிற்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஒரே காரணத்திற்காகக் கைது செய்யப் பட்டு சிறையில் கொடுமைக்கு ஆளாக்கப் பட்ட பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் நமக்கு முன்னால் உயிர்வாழும் சாட்சியாவார்.

தலித், ஆதிவாசி சமூக மக்களைக் கையாள்களாக பயன்படுத்தி மனு ராஜ்ஜியத்தை உருவாக்க சங்பரிவார் இந்துத்துவ பயங்கரவாத சக்திகள் முனைகின்றார்கள்.

அவர்களிடம் அதிகாரம் கிடைத்து விட்டாலோ அந்தச் சமூகங்கள் ஓரங்கட்டப்படும். புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஓரம் கட்டப்பட்டதைப் போல.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...