இந்த சட்டமூலம் தொடர்பில் 196 திருத்தங்கள் ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்றும் இன்றுமென இரண்டு நாட்கள் நடைபெற்றது. சட்டமூலம் மூன்றாம் வாசிப்பின் பின்னரே வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் இருபத்தெட்டு பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அண்மையில் சபாநாயகரிடம் தெரிவித்தது. அதன்படி, அரசியலமைப்புக்கு எதிரான சரத்துகள் திருத்தப்பட்டுள்ளன.
புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரகாரம் ஜனாதிபதி, உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களும் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், ஊழல் மோசடிகள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களின் உரிமைகள் புதிய சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.