காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் ஆண்டுதோறும் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் அதீத மழைப்பொழிவும், கடுமையான வறட்சியும் மாறி மாறி நிலவுகின்றன.
கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உட்பட பல நாடுகளில் சமீப காலமாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் அங்கு பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில் கிரீசின் சில இடங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியை தாண்டியை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனால் அங்குள்ள ரோட்ஸ் தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி அதன் அருகில் உள்ள கோர்பு மற்றும் எவியா தீவுகளுக்கும் பரவி வருகிறது.
எனவே பாதுகாப்பு கருதி அங்கிருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 500 வீரர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகள் அங்கு அனுப்பியுள்ளன.