சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் தமது வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களை, தாம் நடத்தும் தனியார் மேலதிக வகுப்புக்களில் இணைத்துக் கொள்ள ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தை அவ்வாறே அமுல்படுத்துமாறு மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தமது பாட விடயதானங்களை மேலதிக வகுப்புக்களின் ஊடாக மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கே சப்ரகமுவ மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார்.
பாடசாலைகளில் கற்பிக்கும் விடயதானங்களை அதே ஆசிரியர், பணத்தை பெற்றுக்கொண்டு நடத்தும் தனியார் மேலதிக வகுப்புக்களுக்கு, இதற்கு முன்னர் இருவேறு சந்தர்ப்பகளில் சுற்று நிரூபங்களின் ஊடாக தடை விதிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்ததாக இரத்தினபுரி மாவட்ட இணைப்பு குழுக் கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்தே, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.