கொவிட் நோயினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யுமாறு முன்னாள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹக்கீம், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம், தவறான ஆலோசனைகளை வழங்கி சுகாதார அதிகாரிகளை தவறாக வழிநடத்திய அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு எதிராக அமைச்சு நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்ய அதிகாரிகளை வற்புறுத்தி அந்த அதிகாரிகள் இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளனர் என்றும், இது இஸ்லாத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
வேறு எந்த நாடும் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அந்த அதிகாரிகள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மதத்தை மறைமுகமாக இழிவுபடுத்தியதால், வெறுக்கத்தக்க நடத்தைக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்று அவர் கூறினார்
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அமைச்சினால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா என ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பாக அமைச்சுக்கு எவரேனும் முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தப்படும் என்றார்.