இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மீது அனு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட கொடூர நிகழ்வு நடந்து இன்றுடன் 78 ஆண்டுகளாகி உள்ளது.
அந்த பேரழிவு ஏற்படுத்திய வடு இன்றும் ஆறாவில்லை. கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி காலை 08:15 மணி அளவில் அமெரிக்க நாட்டின் போர் விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை ஹிரோஷிமா நகரம் மீது வீசியது.
அடுத்த மூன்றாவது நாள் நாகசாகியில் ‘பேட் மேன்’ என்ற அணுகுண்டை வீசியது அமெரிக்கா.
ஹிரோஷிமாவில் மட்டும் 1.40 லட்சம் மக்களின் உயிரை பறித்தது அணுகுண்டு. இந்த அணுகுண்டால், ஹிரோஷிமாவின் வெப்பநிலை சுமார் 4000 டிகிரியை எட்டியது.
இதன் காரணமாக நகரம் முழுவதும் எரியும் நெருப்புப் பந்தாக மாறியது. முழு நகரமும் கல்லறையாக மாறியது.
அந்த குண்டின் தாக்கம் நகரின் சில கிலோ மீட்டர் தூரம் வரை இருந்தது. குண்டு வெடித்ததால் ஏற்பட்ட தீப்பிழம்பு பல ஆயிரம் அடிகளுக்கு மேல் எழுந்திருந்தது. உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் எண்ணிக்கையை முறையாக கணக்கிடவே ஜப்பானுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது.
வீசப்பட்டது அணுகுண்டு என்பதே குண்டு வீசப்பட்ட 16 மணி நேரத்துக்கு பின்னர் தான் தெரிந்தது.
அமெரிக்கா அணுகுண்டை வீசிய காரணம்
இரண்டாம் உலகப் போர் 1939 இல் தொடங்கியது, இது 6 ஆண்டுகள் கடந்த பின்னரும் நிறுத்தப்படவில்லை. ஜப்பான் உலகின் சக்திவாய்ந்த நாடாக கருதப்பட்ட காலகட்டம் இது.
இரண்டாம் உலகப் போரில், எதிரி நாடுகள் மீது ஜப்பான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்தது.
ஜப்பானை நிறுத்த ஹிரோஷிமாவில் லிட்டில் பாய் பயன்படுத்தியது அமெரிக்கா. அதே நேரத்தில் நாகசாகியில் ‘பேட் பாய்’ அணுகுண்டை வீசியதன் மூலம் ஜப்பானை முடக்கியது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலில், ஜப்பானின் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சுமார் 40 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இந்த அணுகுண்டுகளின் ஆபத்து அதோடு நின்று விடவில்லை.
மாறாக, இதற்குப் பிறகு பல ஆண்டுகளாக, அதன் தாக்கம் நீடித்தது. ஜப்பானின் இந்தப் பகுதிகளில் மக்கள் ஊனமுற்றவர்களாகப் பிறந்தனர்.
அணுகுண்டில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் பிறகு, ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது.
ஆண்டுகள் நீடித்த இரண்டாம் உலகப் போர் 1945 இல் முடிவுக்கு வந்தது. இந்தப் பேரழிவைக் கண்ட ஜப்பான், அணுகுண்டு தயாரிப்பதில்லை என்று சபதம் செய்தது.
முன்னேற்ற பாதையில் ஜப்பான்
இரண்டாம் உலக போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜப்பான், இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் அனைத்திலும் அந்த நாட்டு மக்களுக்கு இருக்கும் கடினமான உழைப்பு மற்றும் தேச பக்தி. மேலும், தொழிலில் புதுமையை கடைப்பிடித்து இன்று முன்னேற்ற பாதையில் நடை போட்டு வருகிறது ஜப்பான்.
ஐநா பொதுச்செயலாளர் பதிவிட்ட ட்வீட்
ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் “78 ஆண்டுகளுக்கு முன்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. அந்த வலி என்றுமே மறக்க முடியாது ஒன்று. ஹிரோஷிமா மக்களின் பக்கம் நான் நிற்கிறேன். அணு ஆயுதங்கள் மீண்டும் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அயராது உழைக்கிறோம்” என ட்வீட் செய்துள்ளார்.