மொத்த மின்சாரத் தேவையில் 12 சதவீதமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சந்திரிகா ஏரியிலிருந்து கட்டகடுவ நீர்த்தேக்கத்திற்கு நீர் வரும் பிரதான கால்வாயில் நீர் பாய்வதை அவதானிப்பதற்காக அண்மையில் அங்கு சென்ற போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யாவிட்டால் இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே நீர் மின்சாரம் வழங்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட ஏரிகள் முற்றாக வறண்டு விட்டதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைந்தபட்சமாக 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பருவ மழைக்கு முன்னதாக வறண்டு கிடக்கும் குளங்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் கிடைக்கப்பெறும் ஒதுக்கீடுகள் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் 0.9 வீதமாகவும், உடவலவ நீர்த்தேக்கத்தில் 0.6 வீதமாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் 30 வீதமாகவும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் 32 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் 26.5 வீதமாகவும், மொவறாகந்த நீர்த்தேக்கத்தில் 13.5 வீதமாகவும் செயற்படும் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் நீர் மின்சார உற்பத்தி கடந்த 19ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.