மோதல்களுக்கு மத்தியில் உள்ள சூடான் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க ஐக்கிய அரபு இராச்சியம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நேற்று (12) சூடானுக்கு 13 மெட்ரிக் டொன் உணவுகளுடன் விமானம் ஒன்றை ஐக்கிய அரபு இராச்சியம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அங்கு தங்கியுள்ள அகதிகளின் உணவுத் தேவைக்கு ஓரளவு ஆதரவை வழங்கும் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் சுல்தான் அல் ஷம்சி தெரிவித்தார்.
குறிப்பாக சூடானில் இடம்பெயர்ந்துள்ள முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த உதவி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான துணை இராணுவத்திற்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது.
சூடான் தலைநகர் கார்டூமில் நடைபெற்று வரும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை சுமார் 2000 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.