பாகிஸ்தானின் பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் டொக்டர் அம்ஜத் அஹ்ஸன் அலியின் மரணத்தையிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்.ரிஸ்வி முப்தி அனுதாபம் வெளியிட்டுள்ளார்.
ஒரு பெரும் ஆலிமுடைய வபாத் தொடர்பான கவலையான செய்தி இன்று எம்மை வந்தடைந்திருக்கிறது. வைத்தியத் துறையில் பட்டம் பெற்ற டொக்டர் அம்ஜத் அஹ்ஸன் அலி, பிற்காலத்தில் தனது தாயினுடைய வஸீயத்துக்காக பல உலமாக்களிடம் ஷரீஆக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார்.
அரபு மொழியைக் கற்பிப்பதற்காக ஆயிஸா ஸித்தீககா என்றும் இப்னு அப்பாஸ் என்றும் இரண்டு நிறுவனங்களை அவர் உருவாக்கினார்.
அல்குர்ஆனை மனனமிடுவது போல ஸஹீஹ் புஹாரி போன்ற கிரந்தங்களையும் மனனமிடுகின்ற இந்தக் கல்வி நிறுவனங்களில் இலங்கையிலிருந்தும் பல சகோதரிகள் கற்றிருக்கின்றார்கள்.
டொக்டர் அம்ஜத் அவர்கள் இலங்கைக்கும் விஜயம் செய்த போதும் நாம் பாகிஸ்தானில் நாங்கள் அவருடைய கல்வி நிறுவனங்களுக்குச் சென்றபோதும் அவரிடமிருந்து நிறைய அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தன.
அல்லாஹுத்தஆலா அவரது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக என அஷ். ரிஸ்வி முப்தி தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சௌத்ரி முஹம்மத் அலியின் மகனான இவர் பாகிஸ்தானின் ஹிஜாமா சிகிச்சை முறையின் முன்னோடியாவார்.
பாகிஸ்தான் லியாகத் தேசிய வைத்தியசாலையின் மருத்துவத் துறைப் பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ள இவர் கைதேர்ந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணருமாவார்.