நாட்டிலுள்ள பாரம்பரிய அல்லது ஆயுர்வேத வைத்தியர்களின் பதிவு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் இருந்து ஆயுர்வேத மருத்துவ சபையின் பதிவு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் ஆயுர்வேத வைத்திய சபையின் சேவைகளை வழங்கும் நோக்கில் மாத்தளை தன்னா ஆயுர்வேத வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் இந்த வேலைத்திட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது ஆயுர்வேத வைத்தியர்கள் புதிய பதிவு, பதிவு புதுப்பித்தல் மற்றும் தொடர்புடைய கடிதங்களை வழங்குதல், அடையாள அட்டை தொடர்பான விண்ணப்பங்கள், பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கான வாகன முத்திரைகள், சான்றளிக்கப்பட்ட பிரதிகள், கடிதங்கள், பதிவு உறுதிப்படுத்தல் கடிதங்கள் மற்றும் எழுத்துச் சான்றிதழ்கள் மற்றும் பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பாரம்பரிய வைத்தியர்கள் பயிற்சி செய்யும் இடங்களுக்கு அரச அதிகாரிகள் சென்று அவர்களை சபையில் பதிவு செய்வது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவை என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி குறிப்பிட்டார்.
பணப்பரிமாற்றம் பெறாமல் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து தன்னார்வப் பணிகளில் ஈடுபடும் பதிவுசெய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களுக்கும் ஆயுர்வேத மருத்துவ சபை பதிவு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.