மோடி ஆட்சியில் தலைக்குனிவே ஏற்பட்டதில்லையா?

Date:

-ப. சையத் அஹமத்

இந்திய பிரதமர் மோடி யாருமே எதிர்பாராத ஒரு கருத்தை குஜராத்தில் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் ‘பாஜக ஆட்சியின் சாதனைகளாக அவர் சிலவற்றைக் கூறிவிட்டு இறுதியாக தன்னுடைய ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு தலைக்குனிவு ஏற்படக்கூடிய எந்தச் செயலையும் தான் செய்யவில்லை என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

இதனைப் படித்தபோது அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. ஏனெனில் முழுப் பூசணியையும் சோற்றில் மறைக்கும் கைங்கர்யத்தை மோடி எளிமையாகக் கையாண்டார்.

எது நடந்தாலும் அதனை சாதாரணமாக மக்களும் அரசியல்வாதிகளும் கடந்து விடுவார்கள் அல்லது மறந்து விடுவார்கள் என்கிற எண்ணத்தில் பேசியதாகவே தெரிந்தது.

மோடி ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பல குழந்தைகள் பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான ‘சேவ் த சில்ட்ரன்’ கூறுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 இலட்சம் வரை இந்தியாவில் மரணமடைகிறது.

அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கின்றது. இதற்கெல்லாம் ஒரே காரணம் உணவுப் பற்றாக்குறை தான்.

எனவே உண்மையான பாதிப்பை அறிய வளர்ந்த நாடுகளின் குழந்தைகள் மரண விகிதத்தை ஒப்பிட்டால் ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3.0 ஆக உள்ளது.

இந்தியாவிலோ, நகர்ப் புறங்களில் 36 ஆகவும், கிராமப் புறங்களில் 58 ஆகவும் உள்ளது திடுக்கிடும் செய்தியாகும்.

இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறை வானவர்கள். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் குழந்தைகள்.

அப்படியிருந்தும் மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாகவே இருப்பது நியாயமாகுமா? நெஞ்சில் ஈரமின்றி குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களில் நிதியை வெட்டி, குறைத்து ஒதுக்கியதால் ஏராளமான குழந்தைகள் பிறந்தவுடன் மரணிப்பதற்குக் காரணமானது இந்தியாவுக்குத் தலைக்குனிவு இல்லையா?

தற்போது நாடு முழுவதும் மாயமாகும் சிறுமிகள், பெண்களின் எண்ணிக்கை தினந்தோறும் ஆயிரத்தைத் தொடுகிறது என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கின்றது. (தினகரன் 26.5.22)

காணாமல் போன மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் சிறுமிகளின் விகிதம் 2016இல் 65 விழுக்காட்டிலிருந்து 2020 இல் அகில இந்திய அளவில் 77 விழுக் காடாக உயர்ந்ததுதான் மோடி ஆட்சியின் சாதனை. நமக்கு இது வேதனை.

பெண்களைப் பாதுகாக்க நிர்பயா நிதித் திட்டம் 2012இல் ஏற்படுத்தப்பட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த சிறந்த திட்டத்தைப் பல மாநிலங்கள் நிதியைப் பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

நிதி சரிவரப் பயன்படுத்தப்படுகிறதா என்று ஒன்றிய அரசு ஏன் கண்காணிக்க வில்லை? பயன்படுத்தாத மாநிலங்கள் மீது இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? போக்சோ சட்ட வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதைத் தடுக்காத அம்மா அரசுகளையும் ஒன்றிய அரசையும் தேர்ந்தெடுத்த மக்கள் தான் தலையில் அடித்துக் கொண்டு தலைகுனிய வேண்டும்.

நிர்பயா நிதித் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே விளங்காத, கையாலாகாத ஒன்றிய அரசின் போக்கால் இன்று நாட்டின் நிலைமை என்ன?

இந்திய சிறுமிகளின் பாதுகாப்பு விஷயத்தில் மனதைப் பிழியும் பரிதாப கொடூர சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு வாரம் வரை சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள்.

அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, பிணத்தை இரவோடு இரவாக ஒரு காட்டுப் பகுதியில் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் பொலிஸாரே எரித்து விட்ட குற்றச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தின.

அது மட்டுமல்ல குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நாடு முழுவதும் திடுக்கத்தை உண்டாக்கியது.

இக்கொடுமைகள் குறித்து சிறிதும் அலட்டிக் கொள்ளாத ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் என்பவர் நிருபர்களிடம் இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பது கடினம்.

ஓரிரு பாலியல் குற்றச் சம்பவங்கள் நடந்தால் அதைப் பெரிதுபடுத்தி விடக் கூடாது என்று கருத்து தெரிவித்தவுடன், நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கன்னத்தில் அறையாத குறையாக கண்டனங்களை எழுப்பின.

கடுகளவு பொறுப்பும் அற்ற ஒன்றிய அமைச்சரின் இக்கூற்று நாட்டு மக்களுக்கு எவ்வளவு பெரிய தலைக்குனிவு.

மேற்படி விவகாரங்கள் தொடர்பாக ஐ.நா. பெண்கள் அமைப்பின் இயக்குநரான பும்சைல்லாம்போ, நியூயார்க்கில் உள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, ஐ.நா. சபையும் அதன் இந்திய ஒருங்கிணைப்பாளரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்டனங்கள் முக்கியமானதுதான். அதே வேளையில் அந்த விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுப்பது அதை விட முக்கியமானதாகும்.

கொலையையும் பாலியல் வன்கொடுமைகளையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.’ (மணிச்சுடர் 20.4.2018) இவ்வளவு நடந்தும் மோடி வாயே திறக்கவில்லை.

மேற்கண்ட உலகளாவிய கண்டனங்களுக்குப் பிறகுதான் முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை ‘மௌனி பாபா’ என்று கிண்டல் அடித்த மோடி வாயே திறந்தார்.

இதன் பிறகுதான் போக்சோ சட்டங்களின் வழக்குகளை விசாரணை செய்ய 1023 போக்சோ சிறப்பு நீதிமன்றங்களைத் தொடங்க ஆணை பிறப்பித்ததை நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா? கடந்த ஒன்பது ஆண்டுகளாக மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு இந்தியனும் தலைகுனிந்து மனம் வருந்தி பெருமூச்சு விடுவதை உலகம் சுற்றும் முதியவரான பிரதமர் மோடி உணர்கிறாரா? இல்லையா? இவ்வளவு களேபரங்களுக்கும் பிறகுதான் 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு 23.4.2018 இல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டார்.

வேலை வாய்ப்பின்மை

வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை புதிதாக 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறிய மோடி நிறைவேற்றினாரா? இல்லை. மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யச்சூரி வேலையின்மை அதிகரிக்கிறது என்ற உண்மையை மோடி அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இப்பொழுது வேலையின்மை கடுமையாக குறைந்து விட்டது என்று மோசடியான புள்ளி விவரங்களை வெளியிடுகிறது ஒன்றிய அரசு.

‘2019 ஆம் ஆண்டில் 3 கோடி வேலை வாய்ப்புகளும் 2022இல் 1 கோடி வாய்ப்புகளும் காணாமல் போய் உள்ளன’ என்கிறார். அதாவது இருந்த வேலை வாய்ப்புகளும் பறிபோனதே மோடி ஆட்சியின் பலன்! இந்நிலை இந்தியர்களுக்கு தலைக்குனிவு இல்லையா?

கொரோனாவும் மோடி ஆட்சியும்

கொரோனா தொற்று கோவிட் 19இன் தாக்கத்தின் போது தடுப்பூசிகள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் உள்நாட்டுத் தேவை அதிகரித்த போதும் வெளிநாடுகளுக்கு தர்மபிரபு போல அனுப்பி, காசு பார்த்ததைக் கண்டு இந்திய மக்கள் மோடி மேல் வெறுப் புற்று தலைகுனியவில்லையா? இதனால் வைரஸ் 2ஆம் அலை முதல் 3ஆம் அலை வரை வேகமாகப் பரவி சமாளிக்க முடியாமல் இந்தியா முழுவதும் மரண ஓலங்கள் அதிகரித்ததோடு, உத்தரப்பிரதேசத்திலும், மத்திய பிரதேசத்திலும் கொத்துக் கொத்தாக மரணங்கள் ஏற்பட்டு, புதைக்க வழியில்லாமலும் நேரமும் இல்லாமலும் இடப்பற்றாக்குறையால் கங்கை நதியில் வீசி எறியப்பட்டு, நதி முழுவதும் பிணங்கள் மிதந்தன. சடலங்கள் கடற்கரை மணலில் கும்பல் கும்பலாகப் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் அதன் செய்திகள் பத்திரிகையில் ஏராளமான படங்களுடன் கட்டுரைகளாக வெளியிடப்பட்டனவே.

இந்த அவலங்களை மறைக்க இந்திய அரசு எத்தனித்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்த நாட்டு மக்கள் வெட்கி, தலைகுனியவில்லையா?

உலக சுகாதார அமைப்பு(WHO) 5.5.2022இல் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் 2020-21ஆம் ஆண்டுகளில் 4.7 மில்லியன் (47 இலட்சம்) மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொரோனா வைரஸால் இறந்திருக்கலாம் என்று கூறியிருந்தது.

2021 டிசம்பர் நிலவரப் படி கொரோனா தொற்று, அதன் தாக்கத்தால் 4.8 இலட்சம் பேர் இறந்துள்ளதாக மோடி அரசு மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் உலக சுகாதார அமைப்பினரின் மதிப்பீடு இதைவிட 10 மடங்கு அதிகமாக உள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 84 விழுக்காடு இறப்பில் மூன்றில் இரண்டு பங்கு உலக அளவில் நாடுகளில் 10 பதிவாகி இருந்தது.

இதில் இரண்டாம் இடத்திற்கு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இருந்ததை தினமும் பத்திரிகையில் வெளிவந்த அட்டவணையிலிருந்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். என்ன ஒரு வேடிக்கை என்றால் அட்ட வணையில் இரண்டாம் இடத்திலிருந்து இந்தியா கடைசி வரை இறங்கவில்லை.

மோடி அரசு கையாண்ட படுமோசமான நிலையால் உலகில் கொரோனா தொற்றால் இறந்தோர் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்.

இது இந்திய மக்களுக்குத் தலைக்குனிவு இல்லையா? இந்தியாவில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மோடி தலைமையிலான அரசு தோல்விடையந்து விட்டதுதான் மேற்கண்ட உலக சுகாதார அமைப்பின் அறிக்கையிலிருந்து புலப்படுகின்றது.

2011 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் ஆட்சியில் மருத்துவப் பராமரிப்பு கிடைக்காமல் 10 விழுக்காட்டினர் மட்டுமே உயிரிழந்தனர்.

ஆனால் 2014க்குப் பின் மோடி தலைமை ஏற்றபிறகு மருத்துவப் பராமரிப்பு கிடைக்காமல் 45 விழுக்காட்டினர் உயிரை விட்டுள்ளனர்.

ஒன்றிய அரசு பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த குறைந்தது 5 விழுக்காடாவது ஜிடிபியிலிருந்து எடுத்து செலவழிக்க வேண்டும் என்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யச்சூரி (தீக்கதிர் 7.5.2022) இந்த சிறந்த யோசனை மோடி அரசின் செவிகளில் ஏறவில்லையே!

கொரோனாவை எதிர்கொண்டதில் 2 ஆம் அலை, 3ஆம் அலையின் போது கையாண்டதில் எந்த உலகத் தலைவர் படுமோசம்? என்கிற கருத்துக் கணிப்பை ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘தி கான்வர்சேஷன்’ (The Conversation) என்கிற செய்தி இணையதளம் தனது டுவிட்டர் பக்கத்தில் நடத்தியது.

இதில் பதிலளிக்க 4 உலகத் தலைவர்களின் பெயர்கள் தரப்பட்டன. அவை பிரதமர் மோடி பிரேசில் அதிபர் பொல்சனாரோ, பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூகா சென்கோ, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஆவர்.

மொத்தம் 75740 பேர் கருத்து தெரிவித்தனர். அதில் பிரேசில், பெலாரஸ் அதிபர்களைத் தாண்டி 90 விழுக்காடு வாக்குகளை அள்ளி, பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார். கொரோனாவை கையாண்டதில் பொல்சனாரோ, லூகா சென்கோ, டிரம்பை விட மோசமாக செயல்பட்டார் பிரதமர் மோடி என்றும் பலர் கூறியுள்ளனர் என்றால் இந்த அவப்பெயர் மூலம் இந்திய மக்களுக்கு எவ்வளவு பெரிய தலைக்குனிவு! இந்த இழிவு இந்தியாவிற்கு உலக அரங்கில் ஏற்பட்டு விட்டதை ஜீரணிக்க முடிகிறதா? (பார்க்க : தினகரன் 23.5.2021)

மோடி ஆட்சியில் உரிமைப் பறிப்பு

குடியுரிமைப் போராட்டத்தின் போது மதத்தின் பெயரால் குடியுரிமை வழங்கு வது அபாயகரமானது என உலகமே சுட்டிக் காட்டியும், மக்களால் எடுத்து வைக்கப்பட்ட நாட்டுப்பற்று மிக்க அறிவுஜீவிகளின் கேள்விகள் கண்டனங்களுக்குப் பதில் தராமல் அடக்குமுறைகளை ஏவி விட்டும், பொய்யான விளக்கங்கள் கூறியும் மக்களை முட்டாளாக்கியது ஒன்றிய அரசு. இதனால் பல தரப்புகளிலிருந்தும் குடியுரிமைச் சட்டங் களை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் குவிந்து விட்டன.

போதாதற்கு இருப்பில் உள்ள வழக்குகளுடன் எங்களையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ளுங்கள் என்று ஐ.நா. மன்றமே மக்களின் பக்கமே நியாயம் உள் ளது எனக்கூறியது. ஐ.நா.வின் அகதிகள் சட்டங்களை, அகதிகளின் உரிமைகளை இந்திய அரசு அப்பட்டமாக மீறுகிறது என்ற செய்தியை அவர்களின் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியது. இது இந்தியாவுக்கு தலைக்குனிவு அல்லாமல் வேறு என்ன?

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...