நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை பருவகால நிகழ்வு, எனவே இதில் அரசியல் இலாபம் தேட எவரும் முயற்சிக்க வேண்டாமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லாவற்றையும் அரசியல் மயப்படுத்தினாலும் மக்கள் பாதிப்புக் களை அரசியல் மயப்படுத்த வேண்டாமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘நாட்டில் 13 மாவட்டங்களில் 50,535 குடும்பங்களைச் சேர்ந்த 166,904 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அந்தந்த மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது
காலநிலையில் ஏற்படும் பருவகால மாற்றங்களினால் நாட்டில் வரட்சியான காலநிலை நிலவுகிறது.
மேலும் எதிர்வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பருவ மழையுடன் நிலைமை மேம்படும்.
பாதுகாப்பு அமைச்சின் அனர்த்தமுகாமைத்துவ பிரிவு, நீர்ப்பாசன அமைச்சு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, விவசாய அமைச்சு, கமநல அபிவிருத்தி திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மகாவலி அதிகாரசபை, மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுடன் நாங்கள் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.