நாட்டின் பிராதான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான தமது முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய குடியரசு முன்னணி, தமிழ்த் தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணி, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை கம்பூனிஸ் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, யுதுகம அமைப்பு உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தமது யோசனைகளை ஜனாதிபதி செயலகத்தில் வழங்கியுள்ளன.
கட்சிகள் தமது முன்மொழிவுகளில் பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம், கல்வி, சுகாதாரம், தேர்தல் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பில் அதிகம் அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத்தில் அறிய முடிகிறது.
கட்சிகளின் நிலைப்பாடுகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பின்னர் அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.
கடந்த ஜுலை 26ஆம் திகதி நடைபெற்ற சர்வக்கட்சிக் கூட்டத்தில் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு கட்சிகளுக்கு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பிரகாரம் கட்சிகள் தமது யோசனைகளை சமர்ப்பித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட சில கட்சிகள் சவர்க்கட்சி கூட்டத்தின் போதே தமது யோசனைகளை சமர்ப்பித்திருந்தன.
விரைவில் மீண்டுமொரு சர்வக்கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுவார் எனவும் அறிய முடிகிறது.
அரசியலமைப்பில் உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது ஜனாதிபதியின் கடமை என்பதன் பிரகாரம், பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதாக கடந்த சர்வக்கட்சி கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சமஷ்டி அடையிலான சுயாட்சியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்” – என கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.