20 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, தெரிவித்துள்ளார்.
அதேநேரம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வரியில்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு கோரியுள்ளதாக ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் வரியில்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகவும், அது பொய்யெனவும் மறுத்துள்ளதாகவும், அவ்வாறான செய்திகளை பரப்புவதற்கு பொறுப்பானவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நிலவும் வறட்சி காரணமாக விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கும் போது எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இவ்வாறான கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லாமல் வாகனத்தை இறக்குமதி செய்யும் பாக்கியம் வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றார்.
20 வருடங்களாக எம்.பி.க்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு நிலைமையை சமாளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரியில்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்ய பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நிதி அமைச்சுக்கு கோரிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.